காய்கறி, மளிகை விலை உச்சத்துக்குப் போன நிலையில் இல்லத்தரசிகளை கலங்க வைக்கும் காஸ் விலை உயர்வு: நேரடி வங்கி கணக்கு ஆசை காட்டி அனைத்து தரப்பினரின் மானியத்தை பறித்த மத்திய அரசு

மாதாந்திர பட்ஜெட்டில்தான் காலத்தை ஓட்ட வேண்டும் என்ற நிலையில்தான், நடுத்தர மக்கள் காலத்தை ஓட்டி வருகின்றனர். ஆனால், அவ்வப்போது விலைவாசி உயர்வுகளால் அத்தியாவசிய செலவுகளுக்கே திண்டாட்டம் ஆகிவிடுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து காய்கறி, மளிகை பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து விட்டது. எனவே, ‘அடுப்பங்கரை பட்ஜெட்டை’ எப்படிப்போட்டாலும் துண்டு விழுவதால், இல்லத்தரசிகள் நிலை பரிதாபமாகிவிட்டது. போதாக்குறைக்கு, சமையல் காஸ் விலையும் உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

முன்பு வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் 400 ரூபாய்க்கு விற்றபோது கவலையில்லை. இப்போது நேரடி மானியம் என்ற பெயரில், ஓசைப்படாமல் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது மத்திய அரசு. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை சென்னையில் சிலிண்டருக்கு ரூ.175 அதிகரித்து விட்டது. சமீபத்திய உயர்வு 50 ரூபாய். மாதத்துக்கு ஒரு முறை என்பது போய், மாதம் இருமுறை விலை மாற்றம் செய்யப்படுகிறது. முதலில் சிலிண்டர் விலையை உயர்த்தும்போது, வங்கிக் கணக்கில் நேரடி மானியமாக வந்து விடும் என அரசு உறுதி அளித்தது. இதன்படி காஸ் இணைப்பு வைத்துள்ளார்கள், தங்கள் ஆதார் எண், வங்கிக்கணக்கை இணைத்தனர்.

சந்தை விலையில் அதிகமாக கொடுத்து வாங்கினாலும், வங்கிக் கணக்கில் மானியம் வந்துவிடும் என்ற ஒரு நிம்மதியால், அதிகம் பணம் கொடுத்து சிலிண்டர் வாங்குகிறோம் என்ற நினைப்பையே மக்கள் பலர் மறந்து விட்டனர். ஆனால், விலை உயர, உயர மானியம் சுருங்கி விட்டது. சில சமயம் வங்கி கணக்கில் சுமார் ரூ.25 வருகிறது. மொத்தத்தில் நேரடி மானிய ஆசை காட்டி, மக்களை சந்தை விலைக்கு வாங்க வைப்பதில் மத்திய அரசு சாதனை படைத்துவிட்டது. தற்போது மாதந்தோறும் உயரும் சிலிண்டர் விலை பெரும் சுமையாக ஆகிவிட்டது. இல்லத்தரசிகள் இதை எப்படி சமாளிக்கப்போகிறார்கள், தீர்வுதான் என்ன? நான்கு கோண அலசல் இதோ:

Related Stories: