சென்னை மாநகராட்சியில் 11 மாதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படாத மன்ற தீர்மானங்கள்: பணிகள் தொடர்பான விவரம் அறிவதில் சிக்கல்

சென்னை: சென்னை மாநகராட்சியின் மன்ற தீர்மானங்கள் 11 மாதங்களாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளதால் இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற பணிகள் தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியாகமல் உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்று தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருந்தால், ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மாநகராட்சியில் எந்த பணிகள் செய்ய வேண்டும் என்றாலும் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிதான் செய்ய முடியும். அதாவது மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு சிறிய கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்றால் கூட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிதான் செய்ய முடியும்.

இதன்படி, ஒவ்வொரு மாதமும் மேயர், துணை மேயர், மன்ற உறுப்பினர்கள், ஆணையர், துணை ஆணையர், பல்வேறு துறை தலைவர்களுடன் மன்ற கூட்டம் நடைபெறும். இதற்கு முன்பாக வார்டு குழுக்கள் கூட்டம் நடைபெறும். அந்த குழுக்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும். இதனை தொடர்ந்து இவற்றை ஆணையர் பரிசீலனை செய்து நிலைக்குழுக்களுக்கு அனுப்புவார். மாநகராட்சியில் நிலைக்கழு (கணக்கு), நிலைக்குழு (கல்வி), நிலைக்குழு (சுகாதாரம்), நிலைக்குழு (வரிவிதிப்பு (ம) நிதி), நிலைக்குழு (பணிகள்), நிலைக்குழு (நகரமைப்பு) உள்ளிட்ட 6 நிலைக் குழுக்கள் உள்ளன. இந்த நிலைக்குழுக்கள் அவற்றை பரிசீலனை செய்து மன்றத்திற்கு பரிந்துரை செய்யும்.  அவைகள் மன்றத்தில் வைக்கப்பட்டு உறுப்பினர்கள் விவாதத்திற்கு பின்பு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இந்த தீர்மானங்கள் உடனுக்குடன் மன்றத்துறையின் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் நிர்வாகம் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனைத்தும் மாநகராட்சி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மாநகராட்சி செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்பதற்காவும், எந்தெந்த பணிகளுக்கு எவ்வுளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காவும் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 4 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறமால் உள்ளது. இதனால் சிறப்பு அதிகாரியின் அனுமதி பெற்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இவ்வாறு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 11 மாதங்களாக மன்ற தீர்மானங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளன. கடைசியாக கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கிய 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மன்ற தீர்மானம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது வரை 11 மாதங்களாக எந்த மன்ற தீர்மானம் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கடந்த 11 மாதங்களாக சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற பணிகள் தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியாமல் உள்ளது.

* எல்லாமே மூடு மந்திரம் -முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்

மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சியில் எல்லாமே மூடு மந்திரமாக உள்ளது. எதுவும் வெளியே தெரிவது இல்லை. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பணிகள் தொடர்பான விவரங்கள் அறிந்துகொள்ள அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. ஆனால் இந்த முறையான பதில்கள் கிடைப்பது இல்லை. இதேப்போல் தான் மாநகராட்சியில் இது தொடர்பான விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை. பணிகள் தொடர்பான விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிய வேண்டும். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றால், அது தொடர்பான விவரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்படும். இதில் நீளம், அகலம், ஒப்பந்தாரர்கள் யார், எப்போது பணி தொடங்கும், எப்போது முடியும் உள்ளிட்ட தகவல்களை கொண்டு ஒரு பலகை வைக்கப்படும். தற்போது, பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க அரசும், மாநகராட்சியும் பயப்படுகிறது. கொரேனா காலத்தில் ஒவ்வொரு மண்டல அலுவலகமும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது. இந்த தொகையில் அவர்கள் என்ன வாங்கினார்கள், என்ன தொகைக்கு வாங்கினார்கள் உள்ளிட்ட எந்த தகவலும் தெரியவில்லை,’’ என்றார்.  

* பிப்ரவரியில் 450 டெண்டர்

சென்னையில் மாநகராட்சியின் நடைபெறும் பணிகளுக்கான ஒப்பந்தம் இ-டண்டர் முறையில் கோரப்படும். இதன்படி இந்த மாதம் மட்டும் மொத்தம் 450 டெண்டர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் தலைமையகம் மற்றும் மண்டல அலுவலங்கள் மூலம் அளிக்கப்படும் அனைத்து டெண்டர்களும் அடங்கும்.

Related Stories: