மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே கடலில் மிதந்த பிளாஸ்டிக் மர்ம பேரல்: தடய அறிவியல் துறையினர் ஆய்வு

சென்னை: மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே கடலில் மிதந்து வந்து பிளாஸ்டிக் மர்ம பேரல் கரை ஒதுங்கியது. இதில், இருப்பது என்ன பொருள், திரவப் பொருளா என பல்வேறு கோணத்தில் மாமல்லபுரம் போலீஸ் விசாரித்து வருகின்றனர். மாமல்லபுரம் கடற்கரை கோயில் வடக்கு திசையில் நேற்று காலை 11 மணியளவில் கடலில் இருந்து நீல நிறம் கொண்ட 6 அடி உயரத்தில், 350 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பேரல் ஒன்று திடீரென கரை ஒதுங்கியது. அப்போது, கரையோரம் இருந்த ஒரு சில மீனவர்கள் இந்த மர்ம பிளாஸ்டிக் பேரல் குறித்து மாமல்லபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலையடுத்து மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் மர்ம பிளாஸ்டிக் பேரல் மூடியை திறந்து பார்த்தபோது, ஒரு விதமான ஆயில் இருந்தது. இது கப்பலுக்கு பயன்படுத்தும் ஆயிலாக இருக்குமா அல்லது ரசாயன திரவமாக இருக்குமோ என சந்தேகமடைந்து பிளாஸ்டிக் பேரலில் இருந்து மாதிரிக்காக கொஞ்சம் எடுத்து சென்னையில் உள்ள ரசாயன ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பினர். பரிசோதனை முடிவு வந்த பிறகே கப்பலில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுப் பொருளா அல்லது வேறு ஏதேனும் திரவப் பொருளா என தெரியவரும். இந்த மர்ம பிளாஸ்டிக் பேரல் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மர்ம பிளாஸ்டிக் பேரலை போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.

Related Stories: