சிபிஎஸ்இ 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் புரோகிதரை போல் திருவள்ளுவர் சித்தரிப்பு: தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: அய்யன் திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது, அவரது உருவத்தை மாற்றுவது என்று அவ்வப்போது விரும்பத்தகாத செயல்கள் நடந்து வருகின்றன. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் தெரிவித்து வருகின்றனர். இதேபோல, அரசியல் கட்சியினரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். தற்போது, திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து புத்தகத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 8ம் வகுப்பு புத்தகத்தில் தான் இந்த கொடுமை நடந்துள்ளது. சிபிஎஸ்இ 8ம் வகுப்பு பாடத்தில் திருவள்ளுவர் குறித்து ”வாசுகிக்கா பிரசன்னா” என்ற தலைப்பில் பாடம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில் திருவள்ளுவருக்கு அவரது மனைவி வாசுகி உணவு பரிமாறுவது போன்ற காட்சி வரையப்பட்டுள்ளது. அதில், திருவள்ளுவரின் தோற்றம் ஒரு புரோகிதர் போல மாற்றப்பட்டிருக்கிறது. தலைமுடி மழித்து பின்னந்தலையில் குடுமி இருப்பது போன்றும் உள்ளது. மேலும் அவரது நெற்றி மற்றும் கைகளில் திருநீர் சாம்பல் பூசி இருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவள்ளுவர் தனது கழுத்து மற்றும் மணிக்கட்டுகளில் உத்திராட்ச மாலை அணிந்திருப்பது போலவும் படம் வரையப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் அவமதிப்பு தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மதம், மொழிகளை கடந்த திருவள்ளுவருக்கு குறிப்பிட்ட ஒரு மதத்தின் சாயத்தை பூச மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல, பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த போக்கு இனிமேல் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

* மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: CBSE 8ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம். பாஜக அரசு அனுமதிக்கிறது; அடிமை அதிமுக அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை.

Related Stories: