அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா விசாரணைக்கு மேலும் 3 மாதம் காலநீட்டிப்பு: உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை:  அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்த்து கோரி கடிதம் எழுதியது, பல்கலைக்கழகத்தில் ரூ.200 கோடி நிதி முறைகேடு, பணி நியமனத்தில் லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்தது. இதையடுத்து தமிழக அரசு தாமாக முன் வந்து சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழுவை கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி அமைத்தது. மேலும் மூன்று மாதங்களுக்குள் சூரப்பா மீதான புகார்களை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நீதிபதி கலையரசன் விசாரணை குழுவில் கூடுதல் பணியாளர்கள் தேவை என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதன்படி விசாரணை குழுவில் 13 பேர் நியமித்து அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தியிடம், சூரப்பா மீதான புகார்கள் குறித்த ஆவணங்களை ஒப்படைக்கக் கோரி விசாரணை குழுவால் பதிவாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து டிசம்பர் 8ம் தேதி விசாரணை ஆணையம் கேட்ட ஆவணங்களை பதிவாளர் கருணாமூர்த்தி மூன்று பெட்டிகளில் கொண்டு வந்து சமர்ப்பித்தார். இருந்தும், சூரப்பா மீதான முக்கிய ஆவணங்கள் முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை.

பதிவாளர் கருணாமூர்த்தி ஒப்படைத்த ஆவணங்கள் அரைகுறையாகவும், முக்கிய ஆவணங்களை அகற்றி விட்டு ஒப்படைத்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த 11ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் காலக்கெடு முடிவடையும் நிலையில், அதனை நீட்டிக்க நீதிபதி கலையரசன் அரசிடம் அவகாசம் கேட்டிருந்தார்.இதையடுத்து, அனைத்து ஆதாரங்களையும் திரட்டி ஆரய்ந்து போது, சூரப்பா ஊழல் புகார் ஆவணங்களில் ஆதாரம் இருப்பதாக நீதிபதி கலையரசன் கடந்த 12ம் தேதி தெரிவித்திருந்தார். மேலும், சூரப்பாவிடம் நேரடியாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.இந்தநிலையில்,  கடந்த 11ம் தேதியுடன் விசாரணை ஆணையத்தின் காலக்கெடு முடிவடைந்த  நிலையில், மேலும் 3 மாத கால அவகாசம் தேவை என  நீதிபதி கலையரசன் உயர்கல்வித்துறையிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று, மேலும் 3 மாத கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அடுத்த  3 மாத த்துக்குள் விசாரணையை முடித்து, அறிக்கையைதாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 11ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

Related Stories: