அரசின் ஒற்றைச்சாளர இணையதளத்தில் மின்இணைப்புக்கு விண்ணப்பிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: தமிழக மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: அரசின் தொழில் தொடங்குவதற்கான ஒற்றைச்சாளர இணையதளமான www.easybusiness.tn.gov.inல் மின்இணைப்புக்கு விண்ணப்பிப்போர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு தொழில் வணிகத்துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச்சாளர இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்து, www.easybusiness.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன்மூலம் தொழில் முனைவோர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினரிடம் இருந்து புதிய உரிமங்கள் மற்றும் புதுப்பித்தல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரிடமிருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ், மின்வாரியத்திடமிருந்து பெற வேண்டிய மின் இணைப்பு, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையிடமிருந்து பெற வேண்டிய தடையில்லா சான்று போன்றவற்றை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் பெறலாம். இதன்மூலம் சம்பந்தப்பட்ட சான்றுகளுக்காக அந்தந்த அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். அந்தவகையில், இந்த இணையத்தில் மின்இணைப்பு கோரி விண்ணப்பிப்போர் என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை, தற்போது வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2017ம் ஆண்டு முதல் உயரழுத்த மின் இணைப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தொழில் முனைவோருக்கு எளிய முறையில் மின் இணைப்பு வழங்கும் வகையில், அவர்கள் தொழில் தொடங்க அனுமதி கோரும் www.easybusiness.tn.gov.in என்ற தளத்திலும் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் படிவ எண் 4ஐ பூர்த்தி செய்து, புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் இணைய முகப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதையடுத்து, விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாக சில தகவல்களுடன் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். ஏதேனும் ஆவணங்கள் சரியில்லாத சூழலில் 7 வேலை நாட்களுக்குள் விண்ணப்பதாரர் விளக்கமளிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். சரியாக இருக்கும் சூழலில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதிலிருந்து மூன்று நாட்களுக்குள் நிறுவன வளாகத்தில் ஆய்வு நடத்தப்படும். பிறகு 15 நாட்களுக்குள் முன்வைப்புத் தொகை செலுத்துவதன் மூலம் பதிவு எண் வழங்கப்படும்.

தொடர்ந்து 15 நாட்களுக்குள் நிர்வாக அனுமதி, மின்னழுத்தத்துக்கான அனுமதி ஆகியவை வழங்கப்படும். அடுத்த 15 நாட்களுக்குள் மதிப்பீட்டுத் தொகை மற்றும் இதர கட்டணத்தையும் செலுத்த வேண்டும். தொடர்ந்து, பணிகள் நடந்து மின் ஆய்வுத்துறையின் ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன் மின் இணைப்பு வழங்கப்படும். ஆய்வு செய்யும் போது பதிவு கட்டணம், முன்வைப்புத் தொகை மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் இருந்தால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும். மேலும் மின்வாரிய இணையதளமான www.tangedco.gov.in மூலமும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: