புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம்: 700 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மீது வழக்குப்பதிவு..!

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நேற்று சென்னை எழிலகம் அருகே 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 2003 ஏப்ரல் 1ம் தேதி மற்றும் அதற்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய வழங்கப்படாது. பணியின் போது பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டுமே கொடுக்கப்படும். இதனால், இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் போராட்டம் நடைபெற்ற நிலையில், மாலை 4 மணிக்கு மேல் அரசு ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமில்லாமல், சென்னை தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அதை தடுத்து நிறுத்திய திருவல்லிக்கேணி போலீசார், அவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 700 அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: