திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி கிருத்திகை விழா: காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவம் கோலாகலம்

காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3ம் நாளான நேற்று காமாட்சி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தங்க மான், சந்திரப்பிரபை, யானை, ஹம்ஸ வாகனம், நாகம், தங்கக் கிளி, குதிரை, வெள்ளிரதம், சூரிய பிரபை, தங்க பல்லக்கு, முத்து சப்பரம், சரபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காமாட்சி அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) தியாகராஜன், கோயில் நிர்வாக அலுவலர் நாராயணன், பரம்பரை தர்மகர்த்தாவின்  ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்கின்றனர்.

திருப்போரூர்: மாசி மாத கிருத்திகையை முருகன் கோயில்களில் விமர்சையாக கொண்டாடப்படும். இதையொட்டி, சென்னைக்கு அருகே புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலில் மாசி கிருத்திகையையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கார், பைக், வேன், பஸ்களில் நேற்று குவிந்தனர். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். கோயிலை ஒட்டி உள்ள திருக்குளத்தில் நீராடி மொட்டை அடித்து ஏராளமான பக்தர்கள் வேல் அலகு தரித்து பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி எடுத்து மாட வீதிகளில் உலா வந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் திருச்சபை மற்றும் பக்த ஜன சபாக்களின் சார்பில் முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்டு மாடவீதிகளில் உலா வந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மொட்டை அடிக்கும் மையம் மீண்டும் திறப்பு

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020 மார்ச் 24ம் தேதி மூடப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயில் திறக்கப்பட்டு, பக்தர்கள் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டனர். கோயிலை ஒட்டி பக்தர்கள்  வசதிக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் மொட்டை அடிக்கும் மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையம் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மொட்டை அடிக்கும் மையம் திறக்கப்பட்டு ஊழியர்கள் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: