சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாத நிலையில் காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு நாளை அடிக்கல்: முதல்வர் எடப்பாடி பங்கேற்பு

சென்னை: சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாத நிலையில், காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு திட்ட பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார். வெள்ள காலக்கட்டங்களில் காவிரி ஆற்றில் உபரியாக  வெளியேறும் நீரை  திருப்பி விட்டு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி 14,410 கோடியில் 262 கி.மீ தூரம் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.  முதற்கட்டமாக, 6941 கோடியில் காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோ மீட்டர் நீளத்திற்கு  கட்டளை கால்வாயில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை வரை தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.  இதன் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறுகிறது.

இரண்டாவது கட்டமாக, தெற்கு வெள்ளாறு முதல் வைகை 109 கிலோ மீட்டர் வரை கால்வாய் உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்காக முதற்கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள கட்டளை கதவணையில் தொடங்கி திருச்சி மாவட்டம் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரைக்கும் ரூ.1486 கோடி நிதி மூலம் 1321.68 ஏக்கர் பட்டா நிலமும், 346.69 ஏக்கர் புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்நிலையில் 6994 கோடி மதிப்பிலான காவிரி-தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டத்துக்கும், 3384 கோடி மதிப்பிலான  விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர் பாசன உட்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

இதற்காக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூர் ஊராட்சியில் விழா நடக்கிறது. விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஸ்கரன், வளர்மதி மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: