வாடகை பாக்கியால் 7 கடைகளுக்கு சீல் பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமான ரூ.2.80 கோடி சொத்துக்கள் மீட்பு: கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

சென்னை: பார்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான 7 கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் ஏமாற்றி வந்த நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் அந்த கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான கடைகள், வீடுகள் மற்றும் நிலங்கள் உள்ளது. இதில், பல கடைகள், வீடுகள் வாடகை பாக்கி செலுத்தாமல் கோயில் நிர்வாகத்தை வாடகை தாரர்கள் ஏமாற்றி வருகின்றனர். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அளித்தால் வாடகை தாரர்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர். இதனால், ஆக்கிரமிப்பு தாரர்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்த நிலையில், நடேசன் சாலையில் 1850 சதுர அடியில் 7 கடைகள் மற்றும் ஒரு ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் சார்பில் ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஆணையர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, போலீசார் ஒத்துழைப்புடன் அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கவெனிதா, ஜெயப்பிரியா ஆகியோர் தலைமையில் சென்ற கோயில் பணியாளர்கள் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த சொத்தின் இன்றைய மதிப்பு ரூ.2.80 கோடி ஆகும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: