80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு எப்போது வழங்கப்படும்: தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வ பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வாக்காளர் பட்டியல் எப்போது அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக பதில்மனு தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதியளித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து திமுக மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் உள்ளன.இந்த நிலையில் தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்கக் கோரி திமுக எம் எல்ஏவும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளின்படி, வாக்காளர் பட்டியலைப் பெற அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும், மாற்றுத் திறனாளி வாக்களர்களின் தனி பட்டியலை வழங்க வேண்டும். அப்போது தான் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு முன் கூட்டியே இந்த வசதி குறித்து விளக்கி, தேர்தல் நடைமுறைகள் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய முடியும் எனவும் வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், தேர்தல் அறிவித்த பிறகு தான், தபால் வாக்குகள் பதிவு செய்ய  விண்ணப்பங்கள்  வழங்கப்படும். அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து தேர்தல் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள்.  அதன் பிறகு தான் அப்பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தபால் வாக்குகள் பதிவு செய்ய எப்போது விண்ணப்பம் பெறப்படும், எப்போது அதன் மீது முடிவெடுக்கப்படும், எப்போது அந்த பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என விரிவாக எழுத்துப்பூர்வமான பதில் மனுவை பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: