பீரியட்ஸ் பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

நன்றி குங்குமம் டாக்டர்

அறிவோம்

மாதவிலக்கு பற்றி நிறைய பேசிவிட்டோம். நிறைய குழப்பங்களுக்கு பதில்களையும் தெரிந்து கொண்டிருப்போம். ஒரு மாறுதலுக்கு மாதவிலக்கு குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போமா?!

முதல் மாதவிலக்குக்கு ஒரு பெயர் உண்டு தெரியுமா... மெனார்கி(Menarche)  என்பதுதான் அது.‘மென்’ என்கிற கிரேக்க வார்த்தையும், ‘ஆர்க்கி’ என்கிற வார்த்தையும் இணைந்தது. மென் என்பதற்கு மாதம் என்றும் ஆர்க்கி என்பதற்கு தொடக்கம் என்றும் அர்த்தமாம்.

மாதவிலக்கான 14-ம் நாள் Ovulation எனப்படுகிற கருமுட்டை வெளியேறும் நிகழ்வு நடக்கும் என்று பொதுவாக சொல்லப்படும். ஆனால், எல்லா பெண்களுக்கும், எல்லா மாதங்களிலும் அது பதினான்காம் நாளில்தான் நடக்க வேண்டும் என அவசியமில்லை. நபருக்கு நபர், மாதத்துக்கு மாதம் வேறுபடலாம். அந்த மாதத்தின் உணவு, உடற்பயிற்சி, தூக்கம், ஸ்ட்ரெஸ் அளவு ஆகியவற்றைப் பொறுத்து அந்த நாள் வேறுபடலாம்.

வெளிப்படுகிற கருமுட்டையானது 24 மணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்கும். அதற்குள் தாம்பத்திய உறவு நிகழ்ந்து, அந்த கரு முட்டையானது ஆணின் உயிரணுவுடன் சேர்ந்து கருவானால் மட்டுமே கர்ப்பம் தரிக்கும். அதனால்தான் அந்த நாட்களில் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், அந்த நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும் என்றும் குழந்தையில்லாத தம்பதியருக்கு மருத்துவர்கள் வலியுறுத்துவார்கள்.

உறவின்போது வெளியேறுகிற உயிரணுவானது, பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்க பிரத்தியேக திரவம் தேவை. கருமுட்டை வெளியேறும் நாட்களில் கருப்பை வாயிலிருந்து அந்த திரவம் சுரக்கும். அதன் உதவியுடன் உயிரணுவானது 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். அப்படி சுரக்காவிட்டால் உயிரணுவை உயிரோடு வைத்திருக்க இயலாத அளவுக்கு பெண்ணுறுப்பு அமிலத்தன்மையோடு காணப்படும்.

மாதவிலக்கு சுழற்சி என்பது காலண்டரில் குறித்துவைத்தது போல குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறைதான் வர வேண்டும் என்று அவசியமில்லை. அந்த சுழற்சியில் எப்போதாவது மாறுதல்கள் நிகழ்வது குறித்து பயப்படத் தேவையில்லை. அதாவது 21 முதல் 35 நாட்களுக்குள் வரும் மாதவிலக்கு சாதாரணமானதுதான். கவலை வேண்டாம்.

மாதவிலக்கின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறம், ரத்தப்போக்கு நீடிக்கும் நாட்களின் நீளம், மாதவிலக்கின்போது ரத்தப்போக்குடன் கட்டிகள் வெளியேறுவது போன்றவை ஏதேனும் பிரச்னைகளின் அறிகுறிகளாக இருக்கலாம். ஹார்மோன் சமநிலையின்மையை உணர்த்தலாம். அசாதாரணமான மாற்றங்களை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

மாதவிலக்குக்கு ஒரு வாரம் முன்பும், மாதவிலக்கு முடிந்த பிறகு சில நாட்கள் வரையிலும் உடல் எடை அதிகரித்துக் காணப்படும். அது இயல்பானதுதான். இந்த நாட்களில் உடலின் நீர்ச்சத்தின் அளவு அதிகரிப்பதே எடை அதிகரிப்புக்கும் காரணம்.

சிலருக்கு PMS எனப்படும் ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் பிரச்னை இருக்கலாம். மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பு ஏற்படுகிற அது ஒருவகையான நோய்க்குறித் தொகுப்பு. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளைக் காட்டும். PMS பாதித்த சிலர், அந்த நாட்களில் வழக்கத்தைவிடவும் அதிகம் சாப்பிடுவார்கள். அதன் விளைவாகவும் எடை அதிகரிக்கலாம்.

மாதவிடாய் நாட்களில் உட்கொள்ளும் உணவுகளிலும், அவற்றின் கலோரி அளவுகளிலும் கவனம் இருக்கட்டும்.

அந்த நாட்களிலும் உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்க வேண்டாம். உடற்பயிற்சிகள் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், மனநிலையையும் ஆரோக்கியமாக வைக்கும்.

மாதவிலக்கு சுழற்சியின் மூன்றாம் வாரத்தில் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோனின் அளவு அதிகமாக இருப்பதால் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழும். அதில் தூக்கமின்மையும் ஒன்று. அதன் தொடர்ச்சியாக சிலருக்கு ஞாபகமறதி அதிகரிக்கலாம். எனவே முக்கியமான நிகழ்வுகளை அந்த நாட்களில் வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது தேவையற்ற குழப்பங்களையும் தவிர்க்கும்.

தொகுப்பு: ராஜி

Related Stories: