தெற்கு டெல்லி மாநகராட்சியில் கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களுக்கு நினைவுச்சின்னம்: நிலைக்குழு கூட்டத்தில் ஆலோசனை

புதுடெல்லி: கொரோனாவால் உயிரிழந்த தெற்கு டெல்லி மாநகராட்சியை சேர்ந்த ஊழியர்களுக்காக கூட்டு நினைவகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என நிலைக்குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா நோய் தொற்று பரவல் அச்சம் காரணமாக அனைத்து துறைகளுக்கும் கடந்த ஆண்டு மார்ச் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஓராண்டுக்கு பின்னர் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டுவர தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், கொரோனா பரவல் காலத்திலும் சுகாதாரத்துறை  ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதுபோன்றவற்றால் இத்துறையை சேர்ந்த பலர் கோவிட் தொற்றுவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். தெற்கு டெல்லி மாநகராட்சியிலும், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிலர் பலியாகினர்.

இதனால், அவர்களுக்கு தெற்கு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கூட்டு நினைவகம் ஒன்றை எழுப்ப வேண்டும் என்று நிலைக்குழு கூட்டத்தில் மாமன்ற தலைவர் நரேந்திர சாவ்லா முன்மொழிந்தார் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக, தனியான ஒரு இடத்திலோ அல்லது பூங்கா அமைப்பிலோ இந்த நினைவகம் எழுப்பலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார். சிவிக் சென்டரில் இந்த நினைவுச்சின்னத்தை அமைக்கலாம் என்று வாய்மொழியாக பரிந்துரைத்ததாக  அந்த அதிகாரி கூறினார். எனினும், இதுகுறித்து சாவ்லாவை தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது அவரிடம் பேச இயலவில்லை. கடந்த ஆண்டு மூன்று மாநகராட்சிகளை சேர்ந்த தொழிலாளர்கள், குறிப்பாக, தெற்கு மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். அக்டோபரில், தெற்கு டெல்லி மாநகராட்சியில் பணிபுரிந்த 41 வயது மருத்துவர் கோவிட் -19 காரணமாக இறந்தார்.அவர் பீகாரின் தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இவருக்கு மனைவி மற்றும் 10 மற்றும் 7 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். மருத்துவர் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினர். அதோடு, அவரது வயதான பெற்றோர் அவரையே முழுமையாக நம்பியிருந்தனர். கடந்த ஜூன் மாதத்தில், வடக்கு டெல்லி மாநகராட்சியை சேர்ந்த ஜூனியர் இன்ஜினியர் ஒருவர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: