மாதவரத்தில் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது: 4 ஆண்டாக பூட்டி கிடக்கும் மாணவர்கள் தங்கும் விடுதி: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட செகரெட்ரியேட் காலனி பகுதியில் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறை  சார்பில், பல லட்ச ரூபாய் செலவில் மாணவர்கள் தங்கும் விடுதி 2016ம் ஆண்டு கட்டப்பட்டு  மறைந்த முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.ஆனால் விடுதி கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் மாணவர்கள் பயன்பாட்டுக்கு  திறக்காமல் பூட்டிவைத்துள்ளனர். இதனால் விடுதியை சுற்றிலும்  செடி, கொடி வளர்ந்து புதர்மண்டி கிடைக்கிறது.

இரவு நேரங்களில் சமூக விரோதிகள் விடுதிக்குள் சென்று மதுஅருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வழிப்பறி கொள்ளையர்கள் விடுதியை பதுங்குமிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வாகன நிறுத்த மையத்தில்  வாகனங்களை நிறுத்தினால் கட்டணம் செலுத்தவேண்டும் என்பதற்காக ஒரு சில லாரி டிரைவர்கள் விடுதி வளாகத்தில் லாரியை நிறுத்திவைத்துள்ளனர். இதனால் அரசுக்கு பல லட்சம் இழப்பீடு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாணவர்கள் தங்கும் விடுதியை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை  வைத்துள்ளனர்.

Related Stories: