அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி காவல்நிலையத்தை உறவினர் முற்றுகை-சின்னமனூரில் பரபரப்பு

சின்னமனூர் : சின்னமனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி இறந்தது தொடர்பாக நடவடிக்கை கோரி, காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சின்னமனூர் ஜக்கம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அய்யாசாமி (55), கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் சின்னமனூர் காவல்நிலையம் அருகே, மெயின்ரோட்டில் டீ சாப்பிடுவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது, தேனியிலிருந்து பாளையம் சென்ற வைக்கோல் லாரி மோதியதில், அய்யாசாமி படுகாயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது மகன் சுருளிவேல் (33), கொடுத்த புகாரின்பேரில், சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். வைக்கோல் லாரி கேரளாவைச் சேர்ந்ததாக இருக்கலாம் என, அக்கம்பக்கத்து சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான போலீசாரின் நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதாக கூறி, அய்யாசாமியின் உறவினர்கள் காவல்நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி சமாதானம் செய்து, பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், காவல்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: