வரத்து அதிகரிப்பால் விலையில் வீழ்ந்தது தேங்காய்-கடமலை-மயிலை ஒன்றிய விவசாயிகள் கவலை

வருசநாடு : வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலையில் வீழ்ந்ததால், கடமலை-மயிலை ஒன்றிய விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு, உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது.

இங்கு விளையும் தேங்காய்களுக்கு கடந்த சில நாட்களாக உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு தேங்காய் அதிகளவில் வருவதால், விலை குறைந்துள்ளதாக கடமலை-மயிலை ஒன்றிய விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஒன்றியத்தில் விளையும் தேங்காய்களை காங்கேயம், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு கொப்பரைக்கும் தேனி, சின்னமனூர், ஆண்டிபட்டி, கம்பம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சில்லறை விற்பனைக்கும் அனுப்பி வருகின்றனர்.

இது குறித்து விவசாயி ரமேஷ் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி தேங்காய்க்கு அதிக விலை கிடைத்தது. ஆனால், கடந்த சில நாட்களாக விலை குறைந்து ஒரு தேங்காய் விலை ரூ.13 முதல் 14 வரை விற்பனையாகிறது. கொப்பரை தேங்காய் டன் ரூ.32 ஆயிரம் வரை விற்கிறது. இதனால், விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தென்னை நல வாரியம் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: