புதிதாக திறக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியாற்ற 13 திருநங்கைகள் நியமனம்.: மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு

சென்னை: புதிதாக திறக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியாற்ற 13 திருநங்கைகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பணியமர்த்தியுள்ளது. வடசென்னை மக்களின் போக்குவரத்து தேவையைப் பூா்த்தி செய்ய உதவும், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் வரையிலான  வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டத்தில் விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை வரையும், பரங்கிமலை-சென்னை சென்ட்ரல் வரையும் 45 கி.மீ. தொலைவில் திட்டப்பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் வரையிலான முதல் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப்பணிகள் ரூ.3,770 கோடியில் நிறைவடைந்துள்ளன.

மொத்தம் 9.051 கி.மீ. தொலைவுள்ள இந்த வழித்தடத்தில் 2 சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும், 5 உயா்நிலைப்பாதை ரயில் நிலையங்களும் என்று ஏழு மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. இது வடசென்னையின் மத்தியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கிவைத்தாா். இது, வடசென்னை மக்களின் போக்குவரத்து தேவைக்கு உதவியாக இருக்கும். மேலும், வடசென்னை பயணிகள் சென்னை விமான நிலையத்தை 60 நிமிடங்களில் வந்தடைய முடியும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தநிலையில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள பல்வேறு பணிகளை செய்ய 13 திருநங்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் நியமித்துள்ளது. இதனால் அதிக திருநங்கைகளை கொண்டு இயங்கும் மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெருமை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்துள்ளது.

Related Stories: