கோவில்பட்டி பகுதியில் உரிய விலை கிடைக்காததால் நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகள்: மழை, படைப்புழு தாக்குதலை தொடர்ந்து அடுத்த அடி

கோவில்பட்டி: தொடர் மழை, படைப்புழு தாக்குதல் என அடுத்தடுத்த பாதிக்கப்பட்ட கோவில்பட்டி பகுதி மக்காச்சோள விவசாயிகள், தற்போது உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தின் விவசாயப் பரப்பில் குறிப்பிடத்தக்க சாகுபடி பயிராக  மக்காச்சோளம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், கழுகுமலை, இளையரசனேந்தல், எட்டயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பயிர்கள் மண்ணில் சரிந்து மீண்டும் முளைக்கத் தொடங்கின. இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டுகளில் போதிய மழை இல்லாமல் மக்காச்சோளப்பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்கி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்து விலையேற்றம் அடைந்தது. ஆனால் இந்தாண்டு பருவ மழை நிலை மாற்றம், தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழு தாக்கம் சற்று குறைந்து நல்ல விளைச்சல் அடைந்துள்ளதோடு வெளி மாநில மக்காச்சோளம் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் மக்காச்சோளத்தை அறுவடை செய்யாமல் செடிகளிலேயே காய விட்டுள்ளனர். சிலர் மட்டுமே அறுவடை செய்து சாலையோரம் காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு சாகுபடியாகும் மக்காச்சோளம் உணவுப்பொருளான குளுக்கோஸ் தயாரிப்பு மற்றும் கோழி, ஆடு, மாடுகளின் தீவனங்கள் தயாரிப்பதற்கும் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. எனவே ஆண்டு முழுவதும் மக்காச்சோளத்தின் தேவை அதிகமாக உள்ளதால் எப்போதும் ஓரளவுக்கு விலை இருக்கும். தற்போது மக்காச்சோளம் அறுவடை பணிகள் நடந்து வரும் நிலையில் வியாபாரிகள் தோட்டத்திற்கே சென்று கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

ஆனால் தற்போது விலை வீழ்ச்சியால் 100 கிலோ மக்காச்சோள மூட்டையை ரூ.1500க்கு கூட விலை போகாததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, ‘ஆண்டு முழுவதும் தேவை இருந்தும் மக்காச்சோளத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் உற்பத்தி செய்வதற்கான செலவு கூட கிடைக்கவில்லை. எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு மக்காச்சோள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.

Related Stories: