சீட் கேட்டு ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் கடும் போட்டி: களை கட்டும் வாசுதேவநல்லூர் தொகுதி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தென் மாவட்டங்களில் வசிக்கும்  பலர் சீட் கேட்டு முட்டி மோதி வருகின்றனர். இம்முறை சீட் பெறுவது முதல்வரின் ஆதரவாளரா அல்லது துணை முதல்வரின் ஆதரவாளரா என்பதை அறிந்துகொள்ள  வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுகவினர் ஆர்வம் காட்டுகின்றனர். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 327 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர். இவர்களில் ஆண்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 227 பேர். பெண்கள் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 101 பேர். மாற்றுத்திறனாளிகள் 39 பேர். தென்காசி மாவட்டத்தில் அதிக அளவிலான மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள தொகுதி வாசுதேவநல்லூர் தொகுதியாகும். வாசுதேவநல்லூர் தொகுதியில் புளியங்குடி நகராட்சி, வாசுதேவநல்லூர், ராயகிரி, சிவகிரி ஆகிய 3 பேரூராட்சிகள் மற்றும் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முழுவதும், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில பகுதிகளும் இடம்பெற்றுள்ளது.

தாலுகாவை பொருத்தவரை சிவகிரி தாலுகா முழுவதும் மற்றும் கடையநல்லூர், சங்கரன்கோவில் தாலுகாக்களில் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட், தமிழக அளவில் எலுமிச்சை விலையை நிர்ணயம் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாக திகழ்கிறது. தொழில்களை பொருத்தவரை தரணி சர்க்கரை ஆலை, செங்கல் சூளைகள் தவிர வேறு குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. புளியங்குடி தவிர்த்து ஏனைய பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் கிராமப்புறங்களாகவே அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்த சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய இரு  தனி தொகுதிகளும் தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ளன. இதில் சங்கரன்கோவில்  தொகுதி அமைச்சரின் தொகுதியாக இருப்பதால் அங்கு சீட்டு கேட்டு முயற்சி மேற்கொண்டாலும் கிடைக்குமா என்ற சந்தேகம் இருப்பதால் பலரும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியை குறி வைத்து வருகின்றனர்.

இதனால் தனி தொகுதிக்கு அதிமுகவினர் மத்தியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மனோகரன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர். தர்ம யுத்தத்தின்போது ஓ.பன்னீர் செல்வத்துடன் அரசை எதிர்த்து வெளியேறிய சட்டமன்ற உறுப்பினர்களில் மனோகரனும் ஒருவர். துணை முதல்வரின் தீவிர ஆதரவாளர் என்ற துருப்புச் சீட்டை  கையில் வைத்து தற்போது மீண்டும் சீட் பெற்று விடுவதில் தீவிரமாக பணியாற்றி  வருகிறார். அதேசமயம் தென்காசி தெற்கு மாவட்ட அவைத் தலைவரும், திருநெல்வேலி கூட்டுறவு ஒன்றிய தலைவருமான நீண்ட அரசியல் அனுபவம் உடைய இலஞ்சி சண்முகசுந்தரமும் வாசுதேவநல்லூர் தொகுதியை குறிவைத்து தீவிர  முயற்சி மேற்கொண்டு வருகிறார். கட்சியில் நீண்ட நாட்களாக பொறுப்பில் இருப்பதால் மேல்மட்டத்தில் உள்ள பலரையும் பிடித்து எப்படியும் சீட் பெற்று  விடுவது  என்பதில் குறியாக இருக்கிறார்.

ஏற்கனவே சங்கரன்கோவில் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கருப்பசாமி மறைந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தலில் முத்துச்செல்விக்கு முன்பாக சண்முகசுந்தரம் தான்  ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர முன்னாள் எம்எல்ஏ துரையப்பா மட்டுமின்றி அவரது இரு மகள்களில் யாரேனும் ஒருவருக்கு வாசுதேவநல்லூர் தொகுதியில் சீட் பெற்று விடுவது என்ற முனைப்பில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவரது இரு மகள்களில் ஒருவரான டாக்டர் சங்கரி தற்போது அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சீட்  கிடைக்கும் பட்சத்தில் மருத்துவர் வேலையை ராஜினாமா செய்வதற்கும் தயாராக உள்ளார். மற்றொரு மகள் சத்யாவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.  சத்யாவின் கணவர் மறைந்த தீபக் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள்  தலைவர் ஆவார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்குள்ள  மேல்மட்ட செல்வாக்குகளை பயன்படுத்தி எப்படியும் குடும்பத்தில் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு பெற்றிட வேண்டும் என்பதில் துரையப்பா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஸ்வர்ணாவும் ஓபிஎஸ் மூலம் சீட்பெற முயற்சிக்கிறார். முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி  சங்கரன்கோவில் தொகுதியை சேர்ந்தவராக இருந்தாலும் அங்கு தற்போதைய அமைச்சரே  போட்டியிடலாம் என்ற கருத்து நிலவுவதால் மாற்றுத் தொகுதியாக வாசுதேவநல்லூரையும்  குறிவைத்துள்ளார். இவருக்கு அமைச்சர் செங்கோட்டையன்  மற்றும் முதல்வர் தரப்பு ஆதரவு உள்ளதாக கட்சியினர் மத்தியில் பரவலான  கருத்து உள்ளது. இது தவிர ராமநாதபுரம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை  வங்கியின் தலைவரும், ஒன்றிய பேரவை செயலாளரும், வாசுதேவநல்லூர் யூனியன்  முன்னாள் துணைத் தலைவருமான சாமிவேலு என்பவரும் தீவிர முயற்சி மேற்கொண்டு  வருகிறார். இவர் கடந்த முறையும் கடுமையாக முயற்சி மேற்கொண்டார். ஆனால்  இவரது பெயர் சாமிவேல் என்பதற்கு பதிலாக சாமுவேல் என்று புரிந்து  கொள்ளப்பட்டதால் அந்த வாய்ப்பு முந்தைய தேர்தலில் மனோகரனுக்கு சென்றதாக கட்சியினர் மத்தியில் கருத்து பரவலாக உள்ளது.

தற்போது இவரும் முதல்வர் எடப்பாடி  அணியில் உள்ள தலைவர்களை அணுகி சீட்டு பெறுவதற்காக நாடி வருகிறார். அத்துடன் இவரது மனைவியும் வாசுதேவநல்லூர் யூனியன் முன்னாள் தலைவருமான காளியம்மாளுக்கும் சீட் கேட்டு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இவர்கள்  தவிர அரசு பணிகளில் பணியாற்றி வருபவர்களும், தென்  மாவட்டங்களில் உள்ள அதிமுக பிரமுகர்களும் சீட் பெறுவதற்கு தங்கள் ஆதரவு தலைவர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில் தாங்கள் ஏற்கனவே பணியாற்றி வரும் அரசு பணியை ராஜினாமா செய்வதற்கு தயாராக உள்ளனர். மொத்தத்தில் இம்முறை வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் சீட் பெறுவது முதல்வர்  எடப்பாடியின் ஆதரவாளரா அல்லது துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரா, தொகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களா அல்லது தொகுதிக்கு வெளியில் உள்ள அதிமுக பிரமுகர்களா என்பதை அறிந்துகொள்ள அதிமுகவினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 327 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர்.  இவர்களில் ஆண்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 227 பேர். பெண்கள் ஒரு  லட்சத்து 22 ஆயிரத்து 101 பேர். மாற்றுத்திறனாளிகள் 39 பேர். தென்காசி மாவட்டத்தில் அதிக அளவிலான மூன்றாம்  பாலினத்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள தொகுதி வாசுதேவநல்லூர் தொகுதியாகும்.

Related Stories: