பாடியநல்லூர் ஊராட்சி குப்பைமேட்டில் தீ விபத்து

புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் மாநகர போக்குவரத்து கழக பணிமனை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், பாடியநல்லூர் ஊராட்சி குப்பை மேடு உள்ளது. இந்த குப்பை மேட்டில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில், தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.  இதைப்பார்த்த,  பணிமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் செங்குன்றம் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அத்தகவலின்பேரில், செங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், மளமளவென எரிந்து கொண்டிருந்த குப்பையில் தண்ணீர் பீய்ச்சி அடித்து, மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக, சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் கரும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால், இப்பகுதியில் வசிப்போர் மற்றும் வாகனயோட்டிகள் கண் எரிச்சல், சுவாச கோளாறு போன்றவற்றால் மிகவும் அவதிப்பட்டனர்.

சுமார் இரண்டு மணி நேர கடும் போராட்டத்துக்குப் பிறகு, தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது இதுகுறித்து, செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமூக விரோதிகள் திட்டமிட்டு, தீ வைத்தனரா? அல்லது இந்த குப்பை மேட்டில், யாராவது வீசிவிட்டு சென்ற சிகரெட்டினால் தீ பிடித்ததா? என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: