ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை: எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், ராயபுரம் மேம்பாலம் அருகேயுள்ள ரயில்வே அச்சகம் முன்பு நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாக பொதுச்செயலாளர் சூர்யபிரகாஷ் தலைமை  வகித்தார். சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, குண சேகரன், வெங்கடேசலு, லோகநாதன் முன்னிலை வகித்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் கூறுகையில், “ரயில்வே நிர்வாகம் கடந்தாண்டு ராயபுரம் ரயில்வே அச்சகம் உட்பட பல்வேறு அச்சங்கள் மூடப்படும் என அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் நடத்தியதால் தற்காலிகமாக நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது.

ராயபுரம் அச்சகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை தன்னிச்சையாக வேறு பிரிவுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. ரயில்வே நிர்வாகத்துக்கு தேவையான டிக்கெட், முன்பதிவு சீட்டு, படிவம் மற்றும் முக்கிய ஆவணங்கள்  ராயபுரம் அச்சகத்தில்தான் அச்சிடப்படுகிறது. இதை தடுக்கும் விதமாக அச்சகத்தை மூட நினைக்கும் ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கிறோம். அச்சகத்தை மூடும் எண்ணத்தை கைவிடாவிட்டால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்துவோம்”  என்றனர்.

Related Stories: