கீழடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள்: முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை: கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும்  அதனைச் சுற்றியுள்ள மணலூர், கொந்தகை மற்றும் அகரம் ஆகிய இடங்களில் ஏழாம் கட்டமாக தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளவுள்ள தொல்லியல் அகழாய்வுப் பணிகளை, முதல்வர் நேற்று காணொலிக் காட்சி  மூலமாக துவக்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லில், 1 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா விருந்தினர் இல்லம் உள்ளிட்ட 8 கோடியே 58  லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகு இல்லங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ள 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மிதி படகுகள் மற்றும் துடுப்புப் படகுகள்,  1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விசைப் படகுகள் மற்றும்  விரைவுப் படகுகள், 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வாட்டர் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்கள் ஆகியவற்றை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயன்பாட்டிற்காக வழங்கினார். தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சார்பில் 60 நிமிட  சுற்றுலா விளம்பர குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இச்சுற்றுலா விளம்பர குறும்படங்கள் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டார்.  தமிழகத்தின் சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்தும் விதமாக, யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள்,  தமிழகத்தின் கோயில்கள், சுற்றுச்சூழல் தலங்கள் மற்றும் பாரம்பரிய தலங்கள் குறித்து 1 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட காலப்பேழை புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.

Related Stories: