புரேவி மற்றும் நிவர் புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு 286 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் புரேவி மற்றும் நிவர் புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 286.91 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நிவர் மற்றும் புரவி  புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரண்டாவது முறையாக வந்த மத்திய குழு ஆய்வு செய்து டெல்லி திரும்பியது. மேலும் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு கண்டிப்பாக மத்திய உள்துறை  அமைச்சகத்தின் ஆலோசனைக்கு பிறகு விவசாயிகளுக்கு உரிய நிவாரண நிதி வழங்கப்படும் என குழு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தின்  ஆலோசனைக்கு பிறகு தற்போது தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் 3,113.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்திற்கு மட்டும் நிவர் புயல் பாதிப்புக்காக 63.14 கோடியும், புரேவி புயல் பாதிப்புக்காக 223.77 கோடி நிதியும் அதாவது மொத்தமாக 286 கோடியே 91 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நிவர் புயலால் பாதித்த அண்டை  மாநிலமான புதுச்சேரிக்கு 9.91 கோடியும், அதிகபட்சமாக பீகார் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக 1,225.27 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து நிதிகளும் மாநில  அரசுகளிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: