நாடு முழுவதும் சட்டங்கள் கடுமையானதால் மரண தண்டனை கைதிகளில் 65% பேர் பாலியல் குற்றவாளிகள்: 2020ல் 76 பேரில் 50 கைதிகள் மீது பலாத்கார வழக்கு...!

புதுடெல்லி: நாடு முழுவதும் பாலியல் வழக்குகளின் சட்டங்கள் கடுமையானதால் கடந்தாண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 65% பேர் பாலியல் குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது. டெல்லியில் உள்ள ஆராய்ச்சி மற்றும் வழக்கறிஞர்கள் குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு முழுவதும் கடந்தாண்டில் மட்டும் 76 கைதிகளுக்கு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. இவர்களில், 50 கைதிகள் அதாவது 65 சதவீதம் பேர் பாலியல் பலாத்காரம் தொடர்பாக குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 2020ம் ஆண்டுதான் மிக அதிகளவிலான கைதிகள் பாலியல் வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ளனர்.

அதாவது 2016ல் 17.64 சதவீதம், 2017ல் 37.27 சதவீதம், 2018ல் 41.10 சதவீதம், 2019ல் 53.39 சதவீதம், 2020ல் 65 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதில், அதிர்ச்சியூட்டும் வகையில் மொத்த வழக்குகளில் 82 சதவீதம் பாதிக்கப்பட்டவர்கள் சிறார்கள் என்பதுதான். கடந்த ஐந்து ஆண்டுகளில், பாலியல் குற்றங்களில் சுமார் 47 சதவீதம் அளவிற்கு மரண தண்டனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்கள் விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றால் ஏற்பட்ட விழிப்புணர்வால் பாலியல் குற்றவாளிகளுக்கான அதிகபட்ச தண்டனை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக 2018ம் ஆண்டில் போக்சோ சட்டம் திருத்தப்பட்டு, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2020 டிசம்பர் 31ம் தேதி வரையிலான நிலவரப்படி, மொத்தம் 404 கைதிகள் மரண தண்டனை கைதிகளாக பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 59 பேரும், மகாராஷ்டிராவில் 45 பேரும், மத்திய பிரதேசத்தில் 37 பேரும் பட்டியல் நீள்கிறது. கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணங்களால் நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

கடந்தாண்டில் மரண தண்டனை அறிவிக்கப்பட்ட 76 கைதிகளுக்கும் மார்ச் 24, 2020 வரை (ஊரடங்கு அறிவிக்கும் முன்) அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். ஊரடங்கு இல்லாததிருந்தால் மரண தண்டனை எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்ட திருத்தத்தின்படி படுகொலை அல்லாத பாலியல் பலாத்காரம், ஆசிட் தாக்குதல் போன்ற குற்றங்களுக்கு மகாராஷ்டிரா அமைச்சரவை மரண தண்டனை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதேபோல், ஐதராபாத்தில் 26 வயது கால்நடை மருத்துவர் பலாத்கார கொலை வழக்கை தொடர்ந்து, ஆந்திர மாநில சட்டமன்றம் - 2019 நிறைவேற்றியது. பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதிக்கிறது. ஆனால், இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. கடந்த 2000ம் ஆண்டு முதல் தற்போது வரை நாடு முழுவதும் இதுவரை 8 கைதிகளுக்கு மரண தண்டனைகளை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடைசியாக 2020ல் நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளிகள் 4 பேர், ஜூலை 2015ல் தீவிரவாதி யாகூப் மேமன், பிப்ரவரி 2013ல் தீவிரவாதி அப்சல் குரு, 2012 நவம்பரில் தீவிரவாதி அஜ்மல் கசாப், ஆகஸ்ட் 2004ல் தனன்ஜோய் சாட்டர்ஜி ஆகியோரின் மரணதண்டனைகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

தூக்கில் தமிழகம் 3வது இடம்

 

கடந்தாண்டில் மட்டும் நாடு முழுவதும் 76 கைதிகளுக்கு விசாரணை நீதிமன்றங்களால் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 13 பேருக்கு தூக்கு அறிக்கப்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக 2வது இடத்தில் மேற்குவங்கத்தில் 9 பேர், 3 வது இடத்தில் தமிழகம், தெலங்கானாவில் தலா 6 பேர், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலா 5 பேர், ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் தலா 4 பேர், பீகார், அசாம், குஜராத், ஆந்திரபிரதேசம் ஆகியன தலா 3 பேர் என்ற வகையில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒடிசா, கேரளா, உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஒருவருக்கு கூட தூக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: