கொடைக்கானல் அருகே வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

கொடைக்கானல்: கொடைக்கானல் பெருமாள்மலை அருகே உள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. கூடுதல் பணியாளர்களை நியமித்து, தீயை விரைந்து அணைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் 15 தினங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடித்து வருகிறது. இதனால் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வறண்டு வருகிறது.

இதன் காரணமாக தனியார் பட்டா நிலங்கள்,  வனத்துறை மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான நிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. இந்நிலையில் நேற்று காலை பெருமாள்மலை அருகே தோகைவரை பகுதியில் வனத்துறை மற்றும் ரெவன்யூ நிலங்களில் உள்ள மரங்களில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனை அணைக்க வனத்துறையினர் மற்றும் வன குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் விலையுயர்ந்த மரங்கள் மற்றும் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன.

இதனால் வனவிலங்குகள் இடம் பெயர்ந்து, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகும்  நிலை உள்ளது. மேலும் அருகில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் கடும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வனத்துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்து தீயை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: