ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் தெப்ப திருவிழாவையொட்டி குளத்தில் உள்ள தாமரை இலைகளை அகற்ற வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயில் தெப்ப உற்சவத்தையொட்டி, குளத்தில் உள்ள தாமரை இலைகளை, இந்து அறநிலையத்துறையினர் அகற்ற வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், 108 திவ்ய தேசங்களில் 63வது இடத்தை பிடித்துள்ளது. இங்கு வரும் 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு மாசி மக தெப்ப திருவிழா, மறுநாள் 27ம் தேதி காலை 7 மணிக்கு தீர்த்தவாரி விழா நடைபெறவுள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான புஷ்கரணி தெப்பக்குளம் பஸ் நிலையத்தில் இருந்து கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ளது.

இந்த குளத்தில் ஆண்டுதோறும் தெப்ப திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கி, ஏராளமான தாமரை இலைகள் வளர்ந்து, குளத்தை முழுவதுமாக ஆக்கிமித்துள்ளது.

தெப்ப உற்சவத்துக்கு இன்னும் 2 வாரமே உள்ளதால், உடனே அங்குள்ள தாமரை இலைகளை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்னர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ’மாமல்லபுரத்தில் ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான குளம், கடற்கரை கோயில் செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்ப உற்சவமும் மறுநாள் காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப உற்சவம் இன்னும் 2 வராங்களில் நடக்க உள்ளது.அதற்கு முன், குளத்தில் படர்துள்ள தாமரை இலைகளை அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடி அகற்றி, எப்போதுமே தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: