குவாரி அனுமதிக்கு 6 மாதத்திற்குள் புதிய விதி உருவாக்க வேண்டும் ஆறுகளின் அருகே பட்டா நிலங்களில் மண் அள்ள அனுமதி வழங்கக்கூடாது : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  ஐகோர்ட் மதுரை கிளையின் எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் சவடு மண் என்ற பெயரில் மணல் திருட்டு நடப்பதாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அதில், ‘‘கனிமவளத்துறையினர், பொதுப்பணித்துறை, நீர் மேலாண்மை மற்றும் மண் சார்ந்த துறையினர் உள்ளிட்டோரைக் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும். இக்குழுவினர் சவுடு மண், கிராவல் மற்றும் மணல் குவாரி நடத்த அனுமதி கேட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையளிக்க வேண்டும். இந்த அறிக்கை அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கவேண்டும். உயர் மட்டக்குழுவினர், ஆறுகள் மற்றும்  அருகிலுள்ள பட்டா நிலங்களில் உள்ள மணல், அவற்றின் அளவு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் அரசைத் தவிர வேறு யாரும் குவாரி நடத்தி மண் அள்ள அனுமதிக்க கூடாது. இதுவரை எத்தனை சவுடு மண் குவாரிக்கு அனுமதிக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை, அறிக்கையாக 8 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த சவடு மண் குவாரிகளை உயர்மட்டக் குழுவினர் ஆய்வு செய்து அங்கிருக்கும் மணல் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையின்படி முறையாக ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 மாதத்திற்குள் புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Related Stories: