விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை கோரி தலைமை செயலாளருக்கு மனு அனுப்ப கூடாது: பொதுநல வழக்கில் சென்னை ஐகோர்ட் அறிவுரை

சென்னை: சென்னை மாநகராட்சியில், கட்டிட விதிமீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னையைச் சேர்ந்த பழனி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்கள் புகார் மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என விதிகள் உள்ளன. ஆனால், பதில் வழங்குவதில்லை. அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பாமல், நேரடியாக தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளார் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள், நேரடியாக தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பியது முறையற்றது. இதை தவிர்க்க வேண்டும் என்று மனுதாரருக்கு அறிவுறுத்தினர். பின்னர், கோரிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு புதிதாக மனு அனுப்ப மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அந்த மனுவை  6  வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: