தனியார் சொத்தை வேறு நபருக்கு மாற்ற மிரட்டல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது சிபிசிஐடி விசாரணை துவக்கம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: சட்ட விரோதமாக தனியார் சொத்தை வேறு நபருக்கு மாற்றுமாறு மிரட்டிய சில போலீஸ் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னையை சேர்ந்த வியாபாரி ஒருவர் குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரில், எனக்கும் எனது நண்பர்களுக்கும் இடையே வியாபார விஷயமான ஒப்பந்தம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. சில காரணங்களுக்காக அந்த வியாபார ஒப்பந்தம் 2017ல் நின்றுவிட்டது. அப்போது வியாபாரம் தொடர்பான பண பரிவர்த்தனை முழுவதும் முடிந்துவிட்டது. இந்த நிலையில், வியாபார பங்குதாரரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஒரு உதவி போலீஸ் கமிஷனர் மற்றும் சில போலீஸ அதிகாரிகள் என்னையும் எனது தாய், சகோதரர் உள்ளிட்டோரை 2019 செப்டம்பர் மாதம் ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைத்தனர். அடையாளம் தெரியாத சில நபருக்கு சொத்துக்களை எழுதி வைக்குமாறு மிரட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட புகார் மீது விரிவான விசாரணை நடத்துமாறு சிபிசிஜடி போலீசாருக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சிபிசிஐடி ஐஜி சங்கர் உத்தரவின்பேரில் எஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் கொடுத்தவர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்காததால் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: