முறைகேடு சர்ச்சை எதிரொலி 668 கோடியிலான வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிக்கான டெண்டர்கள் ரத்து: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: சென்னை நந்தனம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்தையும் அதன் அருகே உள்ள தந்தை பெரியார் மாளிகையையும் இணைத்து பாலத்துடன் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காக விடுக்கப்பட்ட டெண்டர்களில் ரூ.668 கோடிக்கும் மேல் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளரான  பூச்சி எஸ்.முருகன் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் முருகேஷ்க்கு புகார் மனு அனுப்பினார். தொடர்ந்து ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு  மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்கத்திலும் இது குறித்து அவர் புகார்  அளித்தார். மேலும் இந்த விவகாரத்தில் டெண்டரை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் பூச்சி முருகன் சார்பில் அவரது வழக்கறிஞர் புகழ்காந்தி வழக்கும் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பூச்சி எஸ்.முருகன் கூறியதாவது: ரூ.688 கோடி டெண்டர் ரத்து என்பது திமுகவின் சட்ட போராட்டத்துக்கு கிடைத்த பெரிய வெற்றி. சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாடகை வரும் அளவுக்கு பெரியார் மாளிகை கட்டிடம் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அந்த கட்டிடமும் சரி வீட்டுவசதி வாரிய கட்டிடமும் சரி இரண்டுமே ஸ்திர தன்மையுடன் உறுதியாக தான் இருக்கின்றன. இதனை பல்வேறு துறை நிபுணர்களும் உறுதி செய்துள்ளனர். ஆனால் சுயலாபத்துக்காக இந்த இரண்டு கட்டிடங்களையும் இடித்து வருமானத்தை இழக்க வைப்பது மட்டுமல்லாமல் வீட்டு வசதி வாரியத்தின் தலைமையக அலுவலகத்தையும் கோயம்பேடுக்கு மாற்றும் முயற்சி நடக்கிறது. அப்படி மாற்றப்பட்டால் வாடகை செலவும் அதிகரிக்கும்.

ஏற்கனவே நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ஓய்வூதியதாரர்களின் அறக்கட்டளைக்கு தரவேண்டிய ரூ.280 கோடியை வாரிய அதிகாரிகள் தர மறுக்கிறார்கள். வீட்டுவசதி வாரியத்தில் பணி புரிந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள் ஓய்வூதியம் மூலம் மட்டுமே தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். அவர்களது வாழ்வாதாரத்தையும் கெடுக்கும் செயல் இது.  தமிழக அரசு சுயலாபத்துக்காக நன்றாக இருக்கும் கட்டிடங்களை இடித்து கட்டுவதை விட்டு விட்டு ஊழியர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: