லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு: திருப்போரூர் பெண் சார்பதிவாளர் கைது

சென்னை: திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி, பெண் சார்பதிவாளரை கைது  செய்தனர். சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, சார்பதிவாளராக பானுமதி, இணை சார்பதிவாளராக செல்வசுந்தரி ஆகியோர் உள்ளனர். ஓஎம்ஆர் மற்றும் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த சார்பதிவு அலுவலகத்தின் கீழ் வருகிறது. இங்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையொட்டி, நேற்று மதியம் 2.30 மணியளவில் ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி லவக்குமார் தலைமையிலான போலீசார், திடீர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னை முகப்பேரை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்றின் இயக்குனர் மயில்வேலன் என்பவர், தனது அடுக்கு மாடி குடியிருப்புகளை பதிவு செய்ய இணை சார்பதிவாளர் செல்வ சுந்தரியை அணுகினார். அவரிடம் ஒவ்வொரு ஆவணத்துக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என அவர் பேரம் பேசியதாக தெரிகிறது.

இது குறித்து மயில்வேலன், சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அறிவுரைப்படி மயில்வேலன், இணை சார்பதிவாளரிடம் 10 ஆயிரம் கொடுத்தார். அவர் அந்த தொகையை அலுவலக உதவியாளர் விமல் பிரபுவிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து இணை சார்பதிவாளர் செல்வசுந்தரி, உதவியாளர் விமல் பிரபு ஆகியோரை கைது செய்தனர். திருப்போரூர் அலுவலகத்தில் ரெய்டு நடந்து கொண்டிருந்தபோது சார்பதிவாளர் செல்வசுந்தரியின், தாம்பரம் அருகே உள்ள வீட்டிலும் ஒரு குழுவினர் சோதனையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

Related Stories: