வலங்கைமான் தாலுகா அலுவலக வளாகத்தில் போதிய பராமரிப்பின்றி இயங்கும் இ சேவை மையம்: பழுதான யூபிஎஸ் கருவி

வலங்கைமான்: வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் விதமாக வலங்கைமான் தாலுகா அலுவலகம் பகுதியில் இ சேவை மையம் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இ சேவை மையத்தில் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும், சமூக நலத்திட்டங்களான முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், திருமண உதவித் தொகை திட்டங்கள் குறித்தும் இச்சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பொதுமக்கள் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள் பெறவும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வந்து செல்ல வேண்டிய சிரமம் குறைக்கப்படுகிறது. இந்த இ சேவை மையமானது முன்னதாக தாலுகா அலுவலகம் செயல்பட்ட பழைய கட்டடத்தின் ஒரு பகுதியில் இயங்கியது.

பின்னர் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் புதிய கட்டிட வளாகத்தில் தற்போது இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. முன்னதாக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த இ சேவை மையம் கடந்த ஒரு மாதமாக செயல்படாத நிலையில் அதிக அளவில் தாலுகா அலுவலகத்தில் இயங்கும் இ சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த இ சேவை மையத்தில் போதிய அடிப்படை வசதிகள், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமலும் உள்ளன. இ-சேவை மையத்தில் செயல்பட்டு வந்த யூபிஎஸ் பல ஆண்டுகளாக பழுதான நிலையில் மின் தடை ஏற்படும்போது மக்களுக்கு சேவை செய்திட முடியாத நிலை ஏற்படுகின்றது. இ சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் மையத்தின் எதிர்தரப்பில் வெயிலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மையத்திற்கு வரும் மக்கள் அமர்வதற்கு ஏற்ற வகையில் தற்காலிக நிழல்கூரைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றது. இ-சேவை மையத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளம்பர பலகை பழுதடைந்து கிழிந்து காணப்படுகின்றது. வளாகத்தை சுற்றி இலை சருகுகளும், குப்பைகளும் நிரம்பி சுகாதாரமற்ற நிலையில் இ சேவை மையம் செயல்பட்டு வருகின்றது. மேலும் பழுதடைந்த உபகரணங்கள் அலுவலக வளாகத்திலேயே போடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி யூபிஎஸ் உள்ளிட்ட மின்னணு சாதனம் வாங்கும் பணிகள் மேற்கொள்ளவும், பொதுமக்கள் அமரும் விதமாக நிழல் கூரை அமைத்து அதில் இருக்கைகள் அமைத்து தரவும், அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: