பெரம்பலூர் அருகே நள்ளிரவில் விசுவக்குடி அணையை திறந்ததால் 20 ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கியது: விவசாயிகள், பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நள்ளிரவில் விசுவக்குடி அணையைத் திறந்ததால் தண்ணீர் வெளியேறி அன்னமங்கலத்தில் 20 ஏக்கர் வயல்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனை கண்டித்து 3 மணிநேரம் நடந்த சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சி விசுவக்குடி அருகே பச்சைமலை- செம்மலை ஆகிய 2 மலைக் குன்றுகளை இணைத்து 2015ம் ஆண்டு ரூ33.67கோடியில் விசுவக்குடி அணைக்கட்டு கட்டப்ப ட்டது. சமீபத்தில் வடகிழக்கு பருவமழை, நிவர், புரெவிப் புயல்கள் காரணமாக தொடர்ந்து அணைக்கு நீரவரத்து அதிகரித்ததால் நடப்பாண்டு, 33 அடிஉயரமுள்ள அணைக்கட்டில் 30 அடி வரை தேக்கிவைக்கப்பட்ட தண்ணீர், கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி வெங்கலம் ஏரிக்காக திறந்து விடப்பட்டது. இருந்தும் தொடர்ந்து மழைநீர் வந்துகொண்டு இருந்ததால் அணையின் நீர்மட்டம் 25 அடிக்கு மேலாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் விசுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்கள் ஏரி, குட்டைகளை நிரப்பிக்கொள்ள விசுவக்குடி அணைக்கட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்குச்சென்று, அணை யின் தற்காலிகக் காவலாளியாகப் பணியிலிருந்த வின்சென்ட் என்பவரிடம், பொதுப்பணித் துறை உதவிப்பொறியாளரிடம் அனுமதி கேட்டுவிட்டோம் எனக் கூறி, (ரேடியல் ஷட்டர்) மதகின் சாவியை வாங்கிக்கொண்டு அணையின் தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். வழக்கத்தை மீறி, அளவு தெரியாமல் திறந்து விடப்பட்ட தண்ணீர் விசுவக்குடி ஏரி, குட்டைகளை நிரப்பியதோடு அன்னமங்கலம் வயல்களில் புகுந்தது. இதனால் ராமராஜ் என்பவர் நாற்று நட்ட வயல்கள் முழுதும் தண்ணீர் புகுந்து நாசமாக்கியது. மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 20 ஏக்கர் வயல்கள் தண்ணீர் மூழ்கி புதிய ஏரியைப்போல் காணப்படுகிறது.

அணைக்கட்டு திறந்துவிடப்பட்டதால் தண்ணீர் தங்கள் பகுதிக்கு வருவதை அதிகாலையில் அறிந்த அன்னமங்கலம் கிராமத்தினர் அணைக்கு சென்று, அதிகாலை 4:30 மணிக்கு பார்த்தபோது சத்தமில்லாமல் விசுவக்குடி கிராமத்தினர் ஷட்டரை மூடிச்செல்வதைப் பார்த்துள்ளனர். அன்னமங்கலம் வயல் கள் தண்ணீரில் மூழ்கியது அப்பகுதி விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அன்னமங்கலம் விவசாயிகள், பொதுமக்கள் காலை 8 மணியளவில் அன்னமங்கலம் கிராமத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்குவந்த அரும்பாவூர் போலீசார் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருந்தும் அனுமதி தந்த உதவிப் பொறியாளர் மீதும், அணையை திறந்த சம்மந்தப்பட்ட விசுவக்குடி கிராமத்தினர் மீதும் வழக்குப்பதிந்து நடவடிக் கை எடுக்க வேணடும் என அன்னமங்கலம் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

பெரம்பலூர் அருகேயுள்ள அரசலூர் பெரிய ஏரியின் கரை பழுதாகி தண்ணீர் கசிந்து வந்த நிலையில், அதனை பொதுப்பணித்துறை சரிசெய்யாததால், கடந்த 27ம் தேதி உடைந்து, திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 127.40 ஏக்கர் விளைநிலங்களை மூழ்கடித்து சென்ற வெள்ள நீர், பாலையூர் - தொண்டப்பாடி கிராமங்களுக்கு இடையே வி.களத்தூர் சாலையிலுள்ள தற்காலிக தரைப்பாலத்தையும் அடித்துச் சென்றது. இந்தச் சம்பவம் நடந்து 2 வாரங்கள்கூட நிறைவடையாத நிலையில், தற்போது அருகிலுள்ள விசுவக்குடி அணைக்கட்டுத் தண்ணீரை உதவிப் பொறியாளரிடம் அனுமதிபெற்று, விசுவக்குடி கிராமத்தினர் நள்ளிரவில் திறந்து விட்டதால் அன்ன மங்கலம் பகுதியில் 20 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்துள்ளது.

Related Stories: