வங்கி கணக்கில் வைத்துள்ள 10 லட்சத்தை அபகரிக்க மாற்றுத்திறனாளி கொலை: உதவியாளர் கைது

ஆலந்தூர்:  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (32), மாற்றுத்திறனாளி. இவர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், அச்சுத்தன் நகர், 3வது தெருவில் தங்கி, கிண்டியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகசாமி (30), இவருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்,  நேற்று முன்தினம் கிண்டி காவல் நிலையத்தை தொடர்புகொண்ட ஆறுமுகசாமி, ‘விக்னேஷ் வீட்டிற்கு வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது, அவர் இறந்து கிடக்கிறார்,’ என தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விக்னேஷ் சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முதற்கட்டமாக ஆறுமுகசாமியிடம் விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் விக்னேஷை கொலை செய்தது தெரிந்தது. அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது:விக்னேஷிற்கு நான் உதவியாளராக பணிபுரிந்தபோது, அவரது வங்கி கணக்கில் ₹10 லட்சம் வைத்திருப்பது தெரிந்தது. அதனை அபகரிக்க,  விக்னேஷை கொலை செய்ய திட்டமிட்டேன். இதையடுத்து,  சிவகாசியை சேர்ந்த நண்பர் நாராயணனை வரவழைத்து விக்னேஷ் வீட்டிற்கு சென்றேன். அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது  தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்தேன். போலீசில் சிக்காமல் இருக்க, அவர் படுக்கையிலேயே இறந்ததாக நாடகமாடினேன். இவ்வாறு ஆறுமுகசாமி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து கொ லை வழக்காக மாற்றி, ஆறுமுகசாமியை கைது செய்தனர். தலைமறைவான  நாராயணனை பிடிக்க தனிப்படை போலீசார் சிவகாசிக்கு விரைந்துள்ளனர்.

Related Stories: