துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி பதவிக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: மெயின் தேர்வு மே 28ம் தேதி தொடக்கம்

சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி பதவிக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. முதன்மை தேர்வு மே 28ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துணை ஆட்சியர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-19, வணிகவரித்துறை உதவி ஆணையர்-10, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 14, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 4, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 19ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 701 பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த மாதம் 3ம் தேதி நடந்தது. இந்த நிலையில் குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஸ்சி தனது இணையதளம் www.tnpsc.gov.inல் நேற்று வெளியிட்டது.

இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: குரூப் 1 தேர்வு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு,  நேர்முகத்தேர்வு என்ற 3 நிலைகளை கொண்டது. முதல்நிலை தேர்வு எழுத 1,31,701 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 3,752 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 370 பேர் எங்கள் மையத்தில் படித்தவர்கள் ஆவர். இவர்களுக்கான முதன்மை தேர்வு மே மாதம் 28, 29, 30ம் தேதி நடைபெற உள்ளது. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களை தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற 16ம் தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதி மாலை 5.45 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பல்வேறு துறைகளுக்கான பதவிகளில் காலியாக உள்ள 733 இடங்களுக்கு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 52,206 பேர் கலந்து கொண்டனர். இதில் 22 பேர் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 25ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Related Stories: