அதிருப்தி கோஷ்டியை திருப்திபடுத்த அரசு பங்களா: சச்சின் பைலட், 2 மாஜி அமைச்சர்களுக்கு வசுந்தரா ‘பார்முலா’...ராஜஸ்தான் முதல்வர் கெலாட் நடவடிக்கை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அதிருப்தி கோஷ்டிகளை திருப்திபடுத்தும் வகையில் சச்சின் பைலட், 2 முன்னாள் அமைச்சர்களுக்கு சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வருக்கு வழங்கிய அனுமதியின்படி பங்களாக்காள்  ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பேரவை தேர்தலில் பாஜக முதல்வராக இருந்த வசுந்தரா ராஜேவின் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வராக அசோக் கெலாட்டும், துணை  முதல்வராக சச்சின் பைலட்டும், அமைச்சர்களாக ரமேஷ் மீனா, விஸ்வேந்திர சிங் உள்ளிட்டோர் பதவியேற்றனர்.

ஆனால், அடுத்த சில மாதங்களில் ஆட்சி, அதிகார பகிர்வில் கெலாட்டுக்கும், சச்சினுக்கும் கருத்து ேமாதல் ஏற்பட்டது. அதனால், துணை முதல்வர் சச்சின் பைலட், அமைச்சர்கள் விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரை முதல்வர்  அசோக் கெலாட் நீக்கினார். முன்னதாக சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்களும், கெலாட் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்ததால், காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது. ஒருவழியாக கட்சி தலைமை தலையிட்டு  பிரச்னைக்கு தீர்வு கண்டதால், கெலாட் தலைமையிலான ஆட்சி தொடர்கிறது.

ஆனால், சச்சின் பைலட் மற்றும் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்படவில்லை. இருந்தாலும் கூட அவர்கள் மூவரும் அரசு பங்களாவில் வசித்து வருகின்றனர். அமைச்சர் அந்தஸ்தில் இல்லாத இவர்கள்  விதிமுறைகளின்படி அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும். ஆனால், காலி செய்யாமல் இருந்து வந்தனர். இவ்விவகாரம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இவர்களை வெளியேற சொல்ல முடியாமல் தவித்த கெலாட் அரசு, வேறுவழியின்றி சட்டப் பேரவை சபாநாயகரின் சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் அவர்களை அதே பங்களாவில் தங்க  அனுமதி அளித்துள்ளது. எப்படியென்றால், முன்னாள்  பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே, சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் அரசு பங்களாவை பயன்படுத்தி வருவது போன்று, சச்சின் பைலட், 2 முன்னாள் அமைச்சர்களுக்கும் அதே சட்டத்தின் கீழ் முறைப்படி அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அதனால், வசுந்தரா ராஜே, அதிருப்தி கோஷ்டியான சச்சின் பைலட், 2 முன்னாள் அமைச்சர்களும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டியதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: