கல்லணை கொள்ளிடம் ஆற்றில் புதுப்பாலம் திறக்கப்படுவதால் திருக்காட்டுப்பள்ளியில் போக்குவரத்து கழக பணிமனை அமைக்கப்படுமா? -பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருக்காட்டுப்பள்ளி : தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றில் புதுப்பாலம் திறக்கப்பட உள்ள நிலையில் திருக்காட்டுப்பள்ளியில் தமிழக அரசு போக்கு வரத்து கழக பணிமனை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மூலம் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, செங்கிப்பட்டி பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருக்காட்டுப்பள்ளியில் பணிமனை அமைத்து தர வேண்டும் என்று நீண்டநாட்களாக இப்பகுதி மக்கள் கோரி வந்தனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விஷ்ணம்பேட்டை பாதை எதிர்புறம் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க இருப்பதாக போர்டு வைக்கப்பட்டது. பின்னர் காவிரியாற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை ஒட்டி பழமார்நேரி சாலை உடைப்பு அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையமும், அரசு போக்கு வரத்து கழக பணிமனையும் அமைக்க இருப்பதாக கூறப்பட்டது.

இதற்கான முன் வடிவையும் அப்போதைய எம்எல்ஏ ரத்தினசாமி அரசுக்கு அளித்திருந்தார். ஆனால் பணிமனை திருவையாறு அருகே கடுவெளியில் அமைக்கப்பட்டது. இதைவிட மையப்பகுதியான திருக்காட்டுப்பள்ளியில் பணிமனையை அமைத்தால் தான் மக்களுக்கும், அரசுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தஞ்சை பணிமனைக்கும் கடுவெளியில் அமைக்கப்பட்டுள்ள பணிமனைக்கும் 12 கி.மீ.தூரம் தான். மேலும் கடுவெளியிலிருந்து கல்லணை 30 கி.மீ., செங்கிப்பட்டி 32 கி.மீ., தூரம் உள்ளது. இதையே திருக்காட்டுப்பள்ளியில் பணிமனையை அமைத்தால் திருவையாறு, செங்கிப்பட்டி, கல்லணை அனைத்தும் 16 கி.மீ. தூரம் தான். மையப்பகுதியாக இருக்கும்.

அப்போது இரவு நேரங்களில் 10மணிக்கு மேல் தஞ்சை பணிமனைக்கு 20முதல் 25 பேருந்துகள் காலியாகவே சென்றன.

இதனால் சுமார் ஒரு பேருந்துக்கு 6 லிட்டர் டீசல் வீதம் 25 பேருந்துகளுக்கு 150 லிட்டர் டீசல் செவாகிறது. இதனால் அரசுக்கு தினசரி ரூ.8,000 வரையில் நஷ்டம் ஏற்படும். புதிய பணிமனையை கடுவெளியில் அமைத்தாலும் இதே நிலைதான். ஆனால் மையப்பகுதியான திருக்காட்டுப்பள்ளியில் அமைத்தால் அரசுக்கு இந்த நஷ்டம் ஏற்படாது.

மேலும் திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, செங்கிப்பட்டி பகுதியில் பேருந்துகள் பழுதடைந்தால் பழுது பார்க்க தஞ்சையிலிருந்து 30 கி.மீ. தூரம் மெக்கானிக் வரவேண்டும். அன்று இயக்கப்பட வேண்டிய நடைகள் இயக்க முடியாமல் வருவாய் குறையும். கடுவெளியிலிருந்தும் வர இதே நிலைதான் ஏற்படும். திருக்காட்டுப்பள்ளியில் பணிமனை அமைந்தால் பூண்டி -செங்கரையூர் பாலம் வழியாக லால்குடி, திருச்சி பகுதிகளுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க முடியும் என்று கடந்த 21.12.2013ல் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதை கண்டுகொள்ளாமல் கடுவெளியில் பணிமனையை திறந்தனர்.

மேலும் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றில் புதியபாலம் விரைவில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் திருச்சி, ரங்கம் பகுதிகளுக்கு புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தவும் திருக்காட்டுப்பள்ளியில் பணிமனை அமைத்தால் தான் பயனுள்ளதாக இருக்கும். எனவே மக்களுக்கு பயனுள்ளதாகவும், எதிர்கால நோக்கில் கூடுதல் பேருந்துகள் இயக்க வாய்ப்பு கொடுத்தும், அரசுக்கு ஏற்படும் தொடர் (டீசல்) நஷ்டத்தை தடுக்கும் வகையில் கடுவெளியில் அமைக்கப்பட்டுள்ள பணிமனையை திருக்காட்டுப்பள்ளிக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: