நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு நெல் ஏற்றி வரும் லாரிகளால் போக்குவரத்து இடையூறு:தனி சாலை அமைக்க வலியுறுத்தல்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் ரயில்வே குட்ஷெட்டிற்கு பல்வேறு ஊர்களிலிருந்து லாரிகளில் நெல், அரிசி போன்றவை சரக்கு ரயிலில் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க அடிக்கடி வருகிறது. வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்க கொண்டு வரப்படுகிறது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நவீன அரிசி ஆலைகளில் அரவை செய்த அரிசி மூட்டைகளும் பொது வினியோகத்திட்டத்திற்காக வெளி மாவட்டங்களுக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வந்து சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்படுகிறது.

இவ்வாறு வரும் லாரிகள் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள எடை மேடையில் எடை போடப்படுகிறது. அப்போது முன்னதாகவே இரவில் ரயில் நிலைய வளாகத்தில் நெல் மூட்டைகள், அரிசி மூட்டைகளுடன் லாரிகள் நிறுத்தப்படுகிறது. மறுநாள் சரக்கு ரயிலில் அவை ஏற்றுவதற்கு முன்பாக எடை போடப்படுகிறது.

இதற்காக லாரிகள் ரயில் நிலையம் அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மீண்டும் சரக்கு ரயில் பகுதிக்கு லாரிகள் கொண்டு வரப்பட்டு சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றப்படுகிறது. இதற்காக நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுகிறது.  வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நீடாமங்கலத்தில் ரயில் நிலையம் அருகில் நெடுஞ்சாலையில் சிறிது தூரம் சென்று வளைவில் திரும்பி லாரிகள் எடை மேடைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அதே வழியாக ரயில் நிலையவளாகத்திற்கு லாரிகள் வருகின்றன.

அதே சமயம் பட்டுக்கோட்டை, மன்னார்குடி பகுதியிலிருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், சென்னை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களும், தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களும் அதே நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில் லாரிகளால் நெடுஞ்சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதற்கிடையில் ரயில்வே கேட் மூடப்பட்டால் நெடுஞ்சாலைப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவது போல் லாரிகள் எடைபோடும் பணியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ரயில் நிலைய வளாக பகுதியில் உள்ள இடத்திலேயே எடைமேடைக்கு தனி சாலை அமைத்து லாரிகளை எடைபோடும் பணியை நடத்த முடியும். இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

Related Stories: