திருமங்கலம் பகுதியில் நெல் அறுவடை தீவிரம்-விலை போகாததால் விவசாயிகள் வேதனை

திருமங்கலம் : திருமங்கலம் பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், போதுமான விலை போகாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.மதுரை திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பொக்கம்பட்டி, காங்கேயநத்தம், அம்மாபட்டி, பன்னீர்குண்டு, கிழவனேரி, சௌடார்பட்டி, நடுவக்கோட்டை, கரடிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடைபணி தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நெற்பயிர்களை தேர்வு செய்து செப்டம்பர் மாதம் நெல் நாற்றுக்களை விவசாயிகள் நடவு செய்தனர்.

இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக பருவமழை தொடர்ந்ததால் நெல்நாற்றுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விவசாயிகளால் அறுவடை செய்யமுடியவில்லை. தொடர்மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வாடிவிட்டனர். ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யவேண்டிய நெல் தொடர்மழையால் காலதாமதமாகி தற்போதுதான் விவசாயிகள் அறுவடை செய்யும் பணிகளை துவக்கியுள்ளனர்.

காலதாமதமான அறுவடையால் நெல் முற்றியநிலையில் உள்ளது. எடைகுறைந்தும் பதறு நெல் அதிகமாகவும் காட்சியளிக்கிறது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் முதல் செலவு செய்தும் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்தவிலை போவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

எனவே, கடன் வாங்கி பயிரிட்ட நிலையில், கிடைத்த விலைக்கு நெல்மூட்டைகளை விற்றுவிட்டு திரும்புவதாக விவசாயிகள் தெரிவித்தனர். எனவே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நெற்பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கவேண்டும் என அரசுக்கு திருமங்கலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: