கொம்பனின் கொட்டத்தை அடக்க களமிறங்கிய இரட்டையர்கள்; காட்டு யானைகளை அடக்குவதில் கில்லாடி விஜய்: யானைகளை பிடிப்பதில் சளைத்தது அல்ல சுஜய்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் சுற்றி வரும் கொம்பன் யானை சங்கரை பிடிக்கும் பணியில் இரட்டையர்களான விஜய்யும், சுஜய்யும் களமிறங்கியுள்ளனர். விஜய், சுஜய் இந்த பெயரை கேட்டாலே தமிழக கேரள வனத்தை ஒட்டிய கிராமங்கள் அதிரும். இவர்களை பார்த்தாலே காட்டு யானைகள் அஞ்சி பதுங்கும். ஒன்றுபோல் இருப்பது பெயர் மட்டுமல்ல. உருவமும் தான். 1971-ம் ஆண்டு தெப்பாக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் தேவகி என்ற யானைக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை  யானைகள் தான் விஜய்யும், சுஜய்யும். யானைகள் ஒரே பிரசவத்தில் இரட்டை குட்டிகளை ஈனுதல் அரிது.

அதானல் அரிதான உடல் வலிமை மிக்க விஜய்க்கும் சுஜய்க்கும் கும்கி பயிற்சி வழங்கப்பட்டது. சிறந்த கும்கிகளாக உருமாறிய இந்த இரண்டும் காட்டு யானைகளை எளிதில் அடக்கி விடும் திறன் கொண்டவை. அதிலும் விஜய்க்கு இதில் கூடுதல் மதிப்பு. தமிழக கேரள வனத்தை ஒட்டிய பகுதிகளில் எங்கு யானைகள் ஊருக்குள் ஏறினாலும், அதனை விரட்டும் கும்கிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது விஜய்யின் பெயர் தான். கோவையில் விநாயகன் யானையை பிடித்தது, மசினக்குடியில் தீ வைக்கப்பட்ட காட்டு யானையை பிடித்தது போன்றவை விஜய்யின் சாதனைகளுக்கு ஒரு உதாரணம்.

சுஜய்யும் இந்த விஷயத்தில் சளைத்தது அல்ல. தெப்பாக்கத்தில் இருந்து 2015-ம் ஆண்டு கோவை சாடி வயலுக்கு கொண்டு செல்லப்பட்டான் சுஜய். 2016-ம் ஆண்டு பந்தலூரில் காட்டு யானை பிடிபட்டதில் முக்கிய பங்கு சுஜய்க்கு தான். 2018-ம் ஆண்டு முகாமில் மதம்பிடித்த காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதலில் சுஜய்யின் ஒரு தத்தம் உடைந்தது. அதன் பிறகு மீண்டும் தனது தாய் வீடான தெப்பக்காட்டிற்கே அழைத்து வரப்பட்டான் சுஜய். அண்மையில் மசினக்குடியில் உடலில் காயத்துடன் சுற்றி வந்தா யானைக்கு சுஜய் மீது அமர்ந்தே மருத்துவர் சிகிச்சை அளித்தார்.

அந்த அளவில் மனிதர்களுடன் எளிதில் பழகக்கூடியவர்கள் இந்த இரட்டையர்கள். இப்படி பல சிறப்புகளை கொண்ட இந்த இரட்டையர்களை இதுவரை வனத்துறையினர் ஒன்றாக அழைத்து சென்றதில்லை. சேரம்பாடியில் சுற்றி வரும் கொம்பன் சங்கரை பிடிப்பதற்கு தான் இரட்டையர்களை ஒரே நேரத்தில் களமிறக்கியிருக்கிறார்கள். 3 பேரை கொன்ற யானை என்பதால் சங்கரை கட்டுப்படுத்தி வளைத்து பிடிக்க விஜய், சுஜய்யின் திறமையை தான் வனத்துறையினர் நம்பி உள்ளனர்.

Related Stories: