தேவேந்திரகுல வேளாளர் தலைவரை கொல்ல முயற்சி காவல்நிலையம் முன் சரமாரி வெடிகுண்டு வீச்சு: நெல்லையில் பயங்கரம்

நெல்லை: நெல்லை தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளத்தைச் சேர்ந்தவர் கண்ணபிரான் (50). தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனத் தலைவர். இவர், நேற்று காலை 11.30  மணியளவில் அருகில் உள்ள தச்சநல்லூர் காவல்நிலையத்துக்கு ஒரு வழக்கு தொடர்பாக கையெழுத்து போடுவதற்காக ஆதரவாளர்களுடன் வந்துள்ளார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து 4 பைக்குகளில் 10 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். அவர்கள் அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணபிரான் மீது வீசினர். காவல் நிலையத்திற்குள் சென்றதால் அவர் உயிர் தப்பினார்.

முதல் குண்டு காவல்நிலையம் முன்புள்ள பாறையில் பட்டு வெடித்துச் சிதறியது. அடுத்த முன்புறகேட் மீதும், மூன்றாவது குண்டு குடிநீர் குழாய் பகுதியிலும் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போன்று காணப்பட்டது. இதில் கண்ணபிரானின் ஆதரவாளர் கிங்ஸ்டன் உள்பட இருவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் வெளியே வந்து பார்த்தனர். அப்போது மர்மநபர்கள் 4 பைக்குகளில்  தப்பிச் செல்வது தெரிய வந்தது. துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சதீஷ்குமார், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் வந்து ஆய்வு செய்தனர்.

காயமடைந்த கிங்ஸ்டன், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சிதறிக்கிடந்த வெடிகுண்டு துகள்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். அதில் பால்ரஸ் குண்டுகள் மட்டும் காணப்பட்டன. ஆணி, பிளேடு, பீங்கான் துகள்கள் இல்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் காவல் நிலையம் அருகே வெடிக்காமல் கிடந்த மற்றொரு வெடி குண்டையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். பின்னர் கண்ணபிரானை போலீசார் பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: