தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 9, 11ம் வகுப்பு, கல்லூரிகள் நாளை திறப்பு

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்கனவே வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்க உள்ளன. அதே போல் அனைத்து கல்லூரிகளும் நாளை திறக்கப்படுகின்றன. கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் 2020 மார்ச் 25ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. புதிய கல்வி ஆண்டு துவங்கிய போதிலும், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் மாணவர்கள், வீட்டில் இருந்தே படிக்கும் வகையில், ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்தப்பட்டன. கல்வி டிவி வழியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் ஊரடங்கிலும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பி உள்ளது. இதனால் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க, அரசு அனுமதி அளித்தது. முதல் கட்டமாக, கடந்த டிசம்பர் 2ம் தேதி முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிச. 7ல் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்துவதற்காக கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஜன., 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கின.

ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் மட்டும் அமர வேண்டும், மைதானத்தில் கூட்டமாக நின்று மாணவர்கள் பேசக்கூடாது, முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும், பள்ளிக்குள் செல்லும் போது கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும், காய்ச்சல், சளி தொல்லை இருப்பவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்கள் நடந்து வருகின்றன. பெற்றோர் விரும்பினால் மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். இல்லாவிட்டால் வீட்டில் இருந்தே ஆன்லைனில் படிக்கலாம் என பள்ளி கல்லூவித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

ஆனாலும் 95 சதவீதத்துக்கும் மேல் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர். நேரடி வகுப்புகள் துவங்கிய பின், கொரோனா பரவல் பெரிய அளவில் ஏற்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, பிப்ரவரி 8ம் தேதி(நாளை) 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு வகுப்புகளையும், கல்லூரிகளில் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகளை துவக்கவும், அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 31ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி நாளை முதல், 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான வகுப்புகள், அனைத்து பள்ளிகளிலும் துவங்க உள்ளன.

இதேபோல் கல்லூரிகளும் நாளை திறக்கப்பட உள்ளன. இதுகுறித்து, உயர் கல்வி துறை முதன்மை செயலர் அபூர்வா பிறப்பித்த உத்தரவு: அனைத்து வகை இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், டிப்ளமா படிப்புகள் உள்ளிட்டவற்றுக்கு, நாளை முதல், வகுப்புகள் துவங்கலாம். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகளை நடத்த வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் செய்முறை வகுப்புகளை, உரிய காலத்திற்குள் முடிக்கும் வகையில், திட்டமிட்டு வகுப்புகளை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories: