பழைய அனல் மின் நிலையங்களை மூடுவது புதிய திட்டங்களை நிறுத்துவதால் ரூ35 ஆயிரம் கோடி மிச்சம்: அரசு பரிசீலிக்க பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

சென்னை: பழைய அனல் மின்நிலையங்களை மூடுவது மற்றும் புதிய திட்டங்களை நிறுத்துவதால் அரசுக்கு ₹35 ஆயிரம் கோடி மிச்சமாகும். எனவே இதை பரிசீலிக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை வித்துள்ளது.  இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: 3.1 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பழைய நிலக்கரி அனல் மின் நிலையங்களை மூடுவது மற்றும் 3.5 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலைய திட்டங்களுக்கான நிதியை நிறுத்திவிட்டு எதிர்காலத் தேவைக்காக குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகமும் 35 ஆயிரம் கோடி ரூபாயை 5 ஆண்டுகளில் சேமிக்க முடியும் என்று ‘climate risk horizons’ என்கிற ஆராய்ச்சிக் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

 தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை மற்றும் நெய்வேலி 1 மற்றும் 2 நிலை அனல் மின்  நிலையங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையங்களை மூடிவிட்டு அவற்றுக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்குவதால் மேலும்  1,459 கோடி ரூபாயை ஓராண்டிற்கு மிச்சப்படுத்தலாம். 5 ஆண்டிற்கு 7,300 கோடி ரூபாய் மிச்சமாகும். மேலும் 3 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையங்கள் கட்டுமானப்பணி முடிவடைந்து அடுத்த 12 மாதங்களில் உற்பத்தியை துவக்கும் நிலையில் உள்ளன. இதன் காரணமாக பழைய அனல் மின் நிலையங்களை மூடும் செயல்பாடு எளிதானதாகும்.

Related Stories: