ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவிக்காவிட்டால் 12ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம்: தமிழக அரசுக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தமிழக அரசு அறிவிக்காவிட்டால் 12ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர். ரேஷன் கடை ஊழியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து மாநில அளவில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இறுதியாக,ஊதிய உயர்வு வழங்கி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் புதிய குழுவை அரசு சமீபத்தில் அமைத்தது. இந்த குழுவிடம் ரேஷன் கடை ஊழியர்கள், கோரிக்கைகளை அடங்கிய மனுவை அளித்தனர். புதிய ஊதிய குழுவும் ஆய்வு பணிகளை முடித்து, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு அளிக்கலாம் என்ற அறிக்கை அளித்துள்ளது.

ஆனாலும் ஊதிய உயர்வை அளிக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலை  கடை ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் தொமுச பேரவை செயலாளர் இரா.பொன்னுராம் தலைமையில் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு, தமிழ்நாடு அரசு கூட்டுறவு நியாயவிலை கடை  பணியாளர் சங்கம், ஏஐடியுசி, அம்பேத்கர் சங்கம், ஜெஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தொமுச பேரவை செயலாளர் பொன்னுராம் கூறும்போது, ”தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்காமல் கடந்த 3 ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது.

பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், ஊதிய உயர்வு சம்பந்தமான குழு அமைத்தும் தமிழக அரசு அலட்சிய போக்குடன் செயல்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். 12ம் தேதிக்குள் அரசு சம்பள உயர்வை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், வருகிற 12ம் தேதி முதல், சென்னையில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் காலை 10 மணியில் இருந்து ஊதிய உயர்வை அரசு வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Related Stories: