ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கட்டிட மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட ஆவணங்கள் எவ்வளவு? விளக்கம் கேட்கும் பதிவுத்துறை ஐஜி சங்கர்

சென்னை: ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கட்டிட மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட ஆவணங்கள் எவ்வளவு? என்பது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ரூ.50 லட்சத்துக்கு குறைவான மதிப்புள்ள ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகங்களும், ரூ.50 லட்சத்துக்கு மேல் அதிகமான ஆவணங்களை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூலம் கள ஆய்வு செய்யப்பட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், பதிவுத்துறை அலுவலர்கள் சிலர் முறைகேடாக ரூ.50 லட்சத்துக்கு மேல் அதிக மதிப்புள்ள கட்டிடங்களின் மதிப்பை ரூ.50 லட்சத்துக்கு கீழ் மதிப்பு நிர்ணயம் செய்து பத்திரம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறுவதாகவும் தெரிகிறது.

இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி சங்கருக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இந்த புகாரின் பேரில் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கட்டிட மதிப்புள்ள ஆவணங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு திரும்ப வழங்கப்பட்டவை தொடர்பாக விவரங்களை அறிக்கையாக அனுப்ப பதிவுத்துறை ஐஜி சங்கர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பதிவுத்துறை ஐஜி சங்கர் அனைத்து மண்டல டிஐஜிகளுக்கு கடிதத்தில் கூறியிருப்பதாவது:ஆவணப்பதிவின் போது ஆவணத்தின் கட்டிட மதிப்பு ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை தெரிவிக்கப்பட்டு, சார்பதிவாளரால் கள ஆய்வு செய்யப்பட்டு, ஆவணதாரர்களுக்கு திரும்ப வழங்கப்பட்ட ஆவணங்களின் விவரத்தினை உடனே அனுப்புமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. அதில், பதிவு மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், ஆவணத்தின் எண், கட்டிட மதிப்பு என்பது தொடர்பாக விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: