ரம்ஜான் பெருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் தேதியை அறிவிப்பதா? அரசியல் கட்சிகள் கண்டனம்

சென்னை: ரம்ஜான் பெருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் தேதியை அறிவிப்பதா என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. ஜவாஹிருல்லா (மமக தலைவர்): மத்திய அரசுப் பள்ளி கல்வியின் (சி.பி.எஸ்.இ) 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மே 13, 15 அன்று தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 14ம் தேதி ரம்ஜான் விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் அன்று மட்டும் தேர்வுகளை நடத்தாமல் அதற்கு முந்தைய தினமும் பிந்தைய தினமும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரம்ஜான் பண்டிகை அரசு அறிவித்துள்ள மே 14 அன்றோ அல்லது ஒருநாள் முன்போ பின்போ கொண்டாட வாய்ப்புள்ளது.

இந்த சூழலில் மே 13, 15 அன்று தேர்வுகளை எழுதுவது  என்பது முஸ்லிம் மாணவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தையும், சிரமத்தையும்  ஏற்படுத்தும். எனவே, மே 13, 15 அன்று நடைபெற உள்ள தேர்வுகளை வேறொரு  நாளில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்ஜத் பாஷா (எஸ்.டி.பி.ஐ. துணைத் தலைவர்): ரம்ஜான் பண்டிகை தினம் பிறைப் பார்த்தே உறுதி செய்யப்படும். மே 14 நாளுக்கு முந்தைய நாளான மே 13 அன்றோ அல்லது அடுத்த நாளான மே 15 அன்றோ கூட மாறலாம். ஆனால், அந்த இரு தினங்களும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். ஆகவே, மே 13 முதல் 15 ஆகிய நாட்களில் தேர்வு எதுவும் இல்லாத நாளாக தேர்வு அட்டவணையை மத்திய அரசும், சிபிஎஸ்இ இயக்குனரகமும் மாற்றியமைக்க வேண்டும். தேர்வுக்கு இன்னும் 2 மாத காலம் இருப்பதால், தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். சு.வெங்கடேசன் எம்பி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ரமலான் தேதிகள் மாறுகிற பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். மேலும், இஸ்லாமிய மாணவர்களை அவர்களுக்கு முக்கியமான திருநாள் அன்று தேர்வு எழுத  நிர்ப்பந்திப்பது சி.பி.எஸ்.இக்கு அழகல்ல. ஆகவே, அத்தகைய நெருக்கடி வராமலிருக்க இப்போதே தேர்வுத் தேதிகளை மாற்ற வேண்டும்.

Related Stories: