தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி தலைமை தேர்தல் அதிகாரி உட்பட 8 பேர் கொண்ட குழு பிப்.10ல் வருகை: தேர்தல் நடத்துவது குறித்து 3 நாள் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ளன.இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார், கூடுதல் செயலாளர் ஷிபாலி பி.சரன் ஆகிய 8 பேர் கொண்ட குழு வரும் 10ம் தேதி காலை 8.15 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 11.05 மணிக்கு சென்னை வருகின்றனர். 12.15 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரசியல் கட்சிகளுடனும், மாலை 3.30 மணி முதல் 4 மணி வரை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடனும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட எஸ்பிக்களுடனும், மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மீண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர், எஸ்பிக்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதுபோல, 11 பிப்ரவரி 12ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணிவரை தேர்தல் நடத்தும் ஏஜென்சிகளுடனும், 11.30 மணி முதல் 12.30 மணி வரை தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் உயர் அதிகாரிளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிறகு திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அதற்கு முன்னதாக பிப்.9ம் தேதி தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா, துணை ஆணையர் சந்திர புஷன் குமார், இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவஸ்தா, செயலாளர் மல்லையா மாலிக்கு சென்னை வருகின்றனர். அப்போது, தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை எப்படி நடத்துவது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக உள்ளது, மொத்த வாக்குப்பெட்டியின் எண்ணிக்கை, தேவைப்படும் பட்சத்தில் அதனை அனுப்பி வைப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரிகளை எப்போது தமிழகத்திற்கு அனுப்பி வைப்பது, அவர்களுக்கான பயண திட்டம் குறித்து மாநில தேர்தல் அதிகாரியோடு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

Related Stories: