டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் மறியல் போராட்டம்: விவசாய சங்க தலைவர், எம்எல்ஏ கைது

சென்னை: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் மறியல் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி உட்பட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் அமைதி போராட்டம் 74வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய அளவில் பிப்ரவரி 6ம் தேதி சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதைதொடர்ந்து, நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

சென்னையில் தமிழக காவிரி விவசாய சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சுற்றி கயிறு அமைத்து போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். தொடர்ந்து தடுப்புகளை மீறி மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன், தமிமுன் அன்சாரி எம்எல்ஏ உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: