7 பேர் விடுதலையில் மத்திய அரசு நயவஞ்சகம்: முத்தரசன் தாக்கு

சிவகங்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் எல்லை பகுதியை போல தடையை ஏற்படுத்தி, எம்பிக்கள் கூட விவசாயிகளை சந்திக்க விடாமல் செய்யும் மத்திய அரசின் செயல் கண்டனத்திற்குரியது. இது சர்வாதிகார செயல். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் நயவஞ்சக போக்கோடு மத்திய அரசு செயல்படுகிறது. மாநில அரசு தப்பிக்க நினைக்காமல் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை கண்டு அதிமுக அஞ்சுகிறது. உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் பதவிக்காலத்தை தொடர்ந்து நீட்டித்து உள்ளாட்சி தேர்தலைக்கூட சரிவர நடத்தாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. பாஜ தமிழ்நாட்டில் சாதி, மத மோதல்களை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. மதுரையில் பிப். 18 அன்று தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து அரசியல் எழுச்சி மாநாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடக்க உள்ளது. மாநாட்டை தேசிய செயலாளர் டி.ராஜா துவக்கி வைக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றுகிறார். இதில் மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: