சூளைமேனி கிராமத்தில் குளத்தில் தடுப்புகள் இல்லாததல் வாகன ஓட்டிகள் பீதி

ஊத்துக்கோட்டை:சூளைமேனி கிராமத்தில் சாலை ஓரத்தில் அபாயகரமாக உள்ள குளத்துக்கு தடுப்புகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019 - 2020ம் நிதியாண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆதாரங்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆரணியாறு வடிநில கோட்டத்தின் மூலம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் 10 ஏரிகளும், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் 9 ஏரிகளும், பொன்னேரி வட்டத்தில் 11 ஏரிகளும் என  30 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் தூர்வாரி, கரையை பலப்படுத்தும் பணிகள், ஏரி கலங்கள் மற்றும் மதகுகள் சீரமைத்தல் பணிகள், வரத்து கால்வாய் தூர்வாரும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி அரசு ₹ 10.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் சிவன் கோயில் எதிரில் உள்ள குளம் தூர்வார அரசு முடிவு செய்தது. அதன்பேரில்,  கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஒரு லட்சம் ரூபாய் செலவில்  குடிமராமத்து பணிகள் நடைபெற்று  முடிவடைந்தது.

 கடந்த நவம்பர் - டிசம்பரில் பெய்த மழையால், தற்போது இந்த குளம் நீர் நிறைந்து காணப்படுகிறது. இந்த குளம் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இந்த சாலையில், சென்னையில் இருந்து திருப்பதிக்கும், திருப்பதியில் இருந்து சென்னைக்கும் கார், பஸ், வேன் மற்றும் கனரக வாகனங்கள்  ஆகியவை சென்று வருகின்றன. இந்நிலையில், சூளைமேனி கிராமத்தில் தூர்வாரப்பட்ட குளம் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையையொட்டி உள்ளதால், இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் குளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே, சாலையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள குளத்தின் கரையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   

Related Stories: